துரைமுருகன் மகன் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு!- போலீஸின் அடுத்த நடவடிக்கை என்ன? | Case filed against Duraimurugan's son kathir anand

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (10/04/2019)

கடைசி தொடர்பு:17:10 (10/04/2019)

துரைமுருகன் மகன் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு!- போலீஸின் அடுத்த நடவடிக்கை என்ன?

வேலூரில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் களமிறங்கியிருக்கிறார். கடந்த மாதம் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி இரவு வரை வருமானவரித் துறை அதிகாரிகள் துரைமுருகன் வீடு மற்றும் பள்ளி, கல்லூரியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் மீண்டும் நடத்திய சோதனையில், காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகன் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்டன. வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் சிக்கின. 

துரைமுருகன் உதவியாளரிடம் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.10 கோடியே 57 லட்சம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மீது எப்.ஐ.ஆர் பதிவுசெய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்ட கலெக்டரும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமன் உத்தரவின் பேரில் தேர்தல் செலவின மைய ஒருங்கிணைப்பு அலுவலர் சிலுபன், காட்பாடி காவல் நிலையத்தில் நேற்று மதியம் புகார் அளித்தார். நேரடியாகப் பிடிக்கப்படாத குற்றம் என்பதால் வழக்கு பதிவு செய்ய காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் அனுமதி கேட்டனர்.

வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமாரும் மாஜிஸ்திரேட்டுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மற்றும் அவரின் உதவியாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் மூன்றுபேர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125(ஏ), ஐ.பி.சி 171(இ) மற்றும் 171 பி(2) ஆகிய மூன்று பிரிவுகளில் காட்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் மூலம் போலீஸார் அடுத்தகட்டமாக எதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு நிலவுகிறது.

இதுபற்றி விளக்கம் கேட்க கதிர்ஆனந்தின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். அவரின் உதவியாளர் போனை எடுத்து, ‘‘வேட்பாளர் கதிர்ஆனந்த் குடியாத்தத்தில் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். வழக்கு பதிவு பற்றி எங்களுக்கு இன்னும் தகவல் வரவில்லை’’ என்று தெரிவித்தார்.