`தேர்தல் முடிந்ததும் ஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்!' - தம்பிதுரை காட்டம் | Will file case against Stalin, says Karur ADMK candidate Thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (10/04/2019)

கடைசி தொடர்பு:18:10 (10/04/2019)

`தேர்தல் முடிந்ததும் ஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்!' - தம்பிதுரை காட்டம்

`நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தி.மு.க கட்சியின் தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வேன்" என்று கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்தார்.

தம்பிதுரை பிரசாரம்

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பல்வேறு கட்சிகள் சூறாவளி பிரசாரத்தை கிராமங்கள்தோறும் செய்து வருகின்றனர். கரூர் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட வரவணை, சுண்டுகுழிப்பிப்பட்டி, குளத்தூர், வீரமலைபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் வாக்கு சேகரித்தார்.

தம்பிதுரை

அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,`` `எனக்கு 45 கல்லூரிகள் உள்ளன' என்று காங்கிரஸ் வேட்பாளரும், தி.மு.க-வினர்களும் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் இதுபோல் பொய்ப் பிரசாரம் செய்து வரும் ஸ்டாலின் மீதும், தேர்தல் முடிந்த பிறகு வழக்கு தொடர்வேன். 'குஜிலியம்பாறை பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது பெண்களை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கூறியுள்ளார்' என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், அது முற்றிலும் பொய்ப் பிரசாரம். அதுபோல் நான் பேசவில்லை. தவிர, அதுபோல் பேசக்கூடிய தரம்கெட்ட அரசியல்வாதி நான் கிடையாது.

தம்பிதுரை பிரசாரம்..

இரட்டை இலை சரித்திரம் பெற்ற சின்னம். இரட்டை இலையே வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஜோதிமணியைப் பற்றி, `திருமணம் செய்துகொண்டு வாழவேண்டும், இரண்டு மணி நேரம் அரசியலில் ஈடுபட்டால் போதும்' என்றார். அது தரக்குறைவான வார்த்தை இல்லையா?. அதைக் கண்டிக்கவேண்டியதுதானே?. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தோல்வி பயத்தில் உள்ளார். அதனால்தான், இஷ்டத்துக்கும் கண்டதையும் உளறுகிறார்" என்று கூறினார்.