`எங்க ஓனர் சம்பளமாக கொடுத்தார்!'- ஊழியரால் கள்ளநோட்டு அச்சடித்த காங்கிரஸ் பிரமுகர் சிக்கினார் | Kanyakumari congress cadre arrested for printing fake currency

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (10/04/2019)

கடைசி தொடர்பு:18:19 (10/04/2019)

`எங்க ஓனர் சம்பளமாக கொடுத்தார்!'- ஊழியரால் கள்ளநோட்டு அச்சடித்த காங்கிரஸ் பிரமுகர் சிக்கினார்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளநோட்டுகள் மற்றும் பிரின்டர் கைப்பற்றப்பட்டன.

காங்கிரஸ் பிரமுகர் ஜார்ஜ்


கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் காங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். காங்கிரஸ் சேவாதள மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவர் ஆற்றூர் பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். ஜார்ஜுக்குச் சொந்தமான வெல்டிங் கடையில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு பகுதியில் தனது பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஐந்நூறு ரூபாய் நோட்டு கொடுத்துள்ளார். அது கள்ளநோட்டு என தெரியவந்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இது குறித்து குலசேகரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் இளைஞனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, `நான் வேலை பார்க்கும் எங்க வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் ஜார்ஜ் எனக்குச் சம்பளமாக கொடுத்த பணம்'' என்று தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ்

இதையடுத்து, காங்கிரஸ் பிரமுகரான ஜார்ஜை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டில் இருந்த பிரின்டிங் மிசின், ரூ.2,000 கள்ள நோட்டுகள் பதினொன்றும், 9 ஐந்நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஜார்ஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் இந்தக் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.