`நாட்டின் பாதுகாப்பில் சமரசம்!' - ரஃபேல் விவகாரத்தில் பி.ஜே.பி-யைச் சாடும் சீதாராம் யெச்சூரி | Sitharam yechuri slams BJP government over Rafael issue

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (10/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (10/04/2019)

`நாட்டின் பாதுகாப்பில் சமரசம்!' - ரஃபேல் விவகாரத்தில் பி.ஜே.பி-யைச் சாடும் சீதாராம் யெச்சூரி

ரஃபேல் விவகாரத்தில் மத்திய பி.ஜே.பி அரசு நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்திருப்பதாக சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

சீத்தாராம் யெச்சூரி

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``ரஃபேல் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியமானது. இதன்மூலம், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்களை மறைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலில் பிரதமருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதுதொடர்பான உண்மை வெளிவர வேண்டும். இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவும் வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு மேடையிலும், தங்களை இந்தியாவின் காவலாளி என்று சொல்லிக்கொள்ளும் பி.ஜே.பி அரசு, நாட்டின் பாதுகாப்பிலேயே சமரசம் செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தல் விதிமுறைகளை மீறி ராணுவ வீரர்கள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதி காத்து வருகிறது. தேர்தல் ஆணையம் குழந்தையின் கையில் உள்ள விளையாட்டுப் பொம்மை போன்றது. சி.பி.ஐ அமைப்பை பி.ஜே.பி அரசியலுக்காகப் பயன்படுத்தி வருகிறது. பி.எம்.மோடி படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது வரவேற்புக்குரியது. ஆனால், எதற்காக நீண்ட நாள்கள் எடுத்துக்கொண்டனர்?.

சீத்தாராம் யெச்சூரி

மோடி வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார். ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் செய்து வரும் அரசால் பொய்யாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலர்கள் தவறு செய்யும்போது தேர்தல் ஆணையம் மௌனமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் மீதே குற்றச்சாட்டு வருவது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல். நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். இந்தத் தேர்தலில் மக்கள் சுனாமி வரும்" என்றார்.