`என் மண்ணில் வைரமே கிடைத்தாலும் வெட்டி எடுக்கவிடமாட்டேன்!' - தஞ்சையில் தகித்த டி.டி.வி தினகரன் | Ttv dinakaran compagain in thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (10/04/2019)

கடைசி தொடர்பு:19:55 (10/04/2019)

`என் மண்ணில் வைரமே கிடைத்தாலும் வெட்டி எடுக்கவிடமாட்டேன்!' - தஞ்சையில் தகித்த டி.டி.வி தினகரன்

``விவசாயம் என்பது தொழில் கிடையாது  வாழ்க்கை முறை. டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என நான் கடந்த வருடமே கூறிவிட்டேன். எங்கள் மண்ணில் வைரமே கிடைத்தாலும், வெட்டி எடுக்க விடமாட்டேன்'' என தஞ்சாவூரில் தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன்

 

தஞ்சாவூரில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசன், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து கீழவாசல் பகுதியில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, ``உங்களை என் சொந்த மண்ணில் பார்ப்பதில் மிகவும் சந்தோஷம். சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் ரெங்கசாமியைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. எனக்கு கூட சமயத்தில் கோபம் வரும். ஆனால், அவர் கோபமேபடமாட்டார். அரசியலில் பொறுமை, சகிப்புத் தன்மை அவசியம். சோழநாட்டு மக்கள் நியாயத்தின் பக்கம் இருப்பார்கள். துரோகத்துக்குத் துணை போக மாட்டார்கள். வைத்திலிங்கம் ஒரு சண்டியர். அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் காந்தி, சண்டியர் வைத்திலிங்கத்தின் கைத்தடி. அவரின் பினாமி. அவர் டெபாசிட் கூட வாங்கமாட்டார்.

பிரசாரம்

ஆர்.கே நகர் தேர்தலின்போது, அ.தி.மு.க-வினர் பத்தாயிரம் ரூபாய் வாக்குக்கு பணம் கொடுத்தனர். ஆனால், மக்கள் நமக்குதான் ஓட்டுப் போட்டனர். ஆர்.கே.,நகர் தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்ததாகக் கூறி, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு துண்டுச் சீட்டை கைப்பற்றியதாக கூறி தேர்தலை நிறுத்தினர். தற்போது துரைமுருகன் வீட்டில் கட்டு, கட்டாக பணம் எடுத்தனர். ஆனால், தேர்தலை நிறுத்தவில்லை. பா.ஜ.க மத விரோத கட்சி எனச் சொல்லும் ஸ்டாலின் தங்கள் கூட்டணியை மதச்சார்பற்ற கூட்டணி எனச் சொல்லிக் கொள்வதோடு இந்துகளுக்கு எதிரி இல்லை எனச் சொல்கிறார். எங்கள் குடும்பத்திலும் கோயிலுக்குச் செல்கிறார்கள் என பி.ஜே.பி-யினர் போலவே பேசுகிறார். அதனால் பி.ஜே.பி-யின் பி டீம் தான் தி.மு.க.

தினகரன்

ஸ்டாலினின் கூட்டணி, கஜா கூட்டணி, கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது பார்வையிட வந்த ஸ்டாலின் புயலைவிட வேகமாகச் சென்றுவிட்டார். அதனால் மக்கள் அவருக்கு கஜா என பெயர் வைத்துள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். அரசியல்வாதிகள் மதத்தில் தலையிட வேண்டிய அவசியமில்லை. நாட்டில் எவ்வளோ பிரச்னைகள் இருக்கிறது. அதை தீர்க்கும்  நடவடிக்கையில் இறங்கி செயல்பட வேண்டும். ஜி.கே.வாசன் வழிதவறி சென்றுவிட்டார். அவர் தந்தையைப் போல் அவர் இல்லை.

அமமுக

விவசாயம் என்பது தொழில் கிடையாது அது வாழ்க்கை முறை. நான் டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என கடந்த வருடமே கூறி விட்டேன். எங்கள் மண்ணில் வைரமே கிடைத்தாலும், வெட்டி எடுக்க விடமாட்டோம். தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கின்ற துரோகத்தின் கூட்டணி, மோடியின் கூட்டணி. மோடியை டாடி என்று சொல்லுவதால், டாடி கூட்டணியாகவும் உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 6 தொகுதி கூட வெற்றி பெறவில்லை என்றால், ஆட்சி ஆட்டம் கண்டு விடும்.

பரிசுப் பெட்டகம் சின்னத்தை வாங்குவதற்கே பெரும் போராட்டத்தை நடத்தினோம். அதற்கு காரணம் மோடி. நம்மை சுயேச்சைகள் என கிண்டல் செய்கிறார்கள். சுயேச்சைகள் இப்படி ஒரே சின்னத்தில் போட்டியிடுவது, இதுவரை இந்திய வரலாற்றிலேயே நடந்தது கிடையாது. ஆர்.கே.,நகர் தேர்தலில் எப்படி தி,.மு.க வை டெபாசிட் இழக்கச் செய்தோமோ, அ.தி.மு.க-வை புறமுதுகிட்டு ஓடச் செய்தோமே அதேபோல நமது வேட்பாளர்கள் அனைவரும் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற வைக்க வேண்டும். நம் வெற்றி  மைல்கல்லாக மாற வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க