`கனிமொழி, தமிழிசை மனு செல்லவே செல்லாது!' - கௌதமன் கம்ப்ளைன்ட் | Reject kanimozhi and tamilisai's nomination, Gowthaman urges EC

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (10/04/2019)

கடைசி தொடர்பு:20:30 (10/04/2019)

`கனிமொழி, தமிழிசை மனு செல்லவே செல்லாது!' - கௌதமன் கம்ப்ளைன்ட்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கௌதமன் புகார்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ள கனிமொழி மற்றும் தமிழிசை சௌந்தரராஜனின் மனுக்கள் தேர்தல் விதிமுறையை மீறி இருப்பதாக இயக்குநரும், தமிழர் பேரரசு கட்சித் தலைவருமான கௌதமன் புகார் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை எதிர்த்து தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர்    கனிமொழி போட்டியிடுகிறார். இருவரும் அந்தத் தொகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி  வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது இருவர் மனுவிலும் குறை இருப்பதாகக் கூறி தேர்தல் அதிகாரிகள் மனுவை ஒத்தி வைத்தனர். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்போதே இயக்குநர் கௌதமன் இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று புகார் கூறியிருந்தார்.

தமிழிசை சவுந்திர ராஜன்-  மக்களவை தேர்தல் வேட்பாளர்கள்

இந்தநிலையில், தற்போது தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து புகார் கொடுத்துள்ளார். அதுகுறித்து கௌதமனிடம் பேசியபோது,``தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கனிமொழி இருவரின் மனுக்களை தேர்தல் ஆணையம்  ஏற்றிருக்கக் கூடாது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தமிழிசை தற்சார்பு இயக்குநராக, ஆதாயம் தரும் பதவியில் உள்ளார் என்று புகார் எழுந்தபோது ஏன் அவர் உடனடியாக தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை. அது மட்டுமின்றி வேட்புமனு பரிசீலனையின்போது கட்டாயம் வேட்பாளர் இருந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பரிசீலனை நடந்தபோது அவர் இல்லை. அதேபோன்று கனிமொழி மற்றும் அவருடைய கணவருக்கும் சிங்கப்பூரில் சொத்துகள் உள்ளன. 

கனி மொழி -மக்களவை தேர்தல் வேட்பாளர்கள்

அந்த விவரத்தை இந்த மனுவில் அவரும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இருவரின்  மனுவும் தேர்தலுக்கு தகுதியில்லாத மனுக்கள், அந்த மனுக்களை மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது குறித்து சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை அணுகினால் 'நாளைக்கு வந்து எழுத்துபூர்வமாக கொடுங்கள்' என்றார். அடுத்த நாள் சென்று எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுத்தால் 'உங்களுக்கு அந்தத் தகவலை தர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. நீங்கள் நீதிமன்றத்துக்குப் போங்கள் அல்லது தேர்தல் ஆணையத்துக்குப் போங்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை' என்கிறார். இதில் கனிமொழி, தமிழிசை செளந்தரராஜன் இருவரும் சட்டவிரோதமாக நடந்துகொள்கிறார்களா அல்லது இவர்களுக்குத் தேர்தல் அதிகாரியாக உள்ள  மாவட்ட ஆட்சியர் துணை போகிறாரா?. எனவே, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து புகார் மனுவைக் கொடுத்துள்ளேன் ' என்றார் கௌதமன்.