`வழக்கைச் சந்திப்போம்; என்னைப் பயமுறுத்தத் தப்புக்கணக்குப் போடுகிறார்கள்!’ -துரைமுருகன் | DMK treasurer Duraimurugan speaks about it raid

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (10/04/2019)

கடைசி தொடர்பு:21:30 (10/04/2019)

`வழக்கைச் சந்திப்போம்; என்னைப் பயமுறுத்தத் தப்புக்கணக்குப் போடுகிறார்கள்!’ -துரைமுருகன்

‘‘என் மகன் மீது பதியப்பட்ட வழக்கைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். என்னைப் பயமுறுத்துவதற்காக தப்புக்கணக்குப் போடுகிறார்கள்’’ என்று ஆளும்கட்சியை துரைமுருகன் சாடினார்.

துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த வாரம் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகக் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மற்றும் உதவியாளர்கள் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் மூன்று பிரிவுகளில் காட்பாடி போலீஸார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ``வழக்கைச் சந்திப்போம். நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது, பார்த்துக்கொள்கிறோம். வருமானவரித் துறை சோதனைக்குப் பிறகும் மக்கள் அதிக ஆசையோடு எங்களை வரவேற்கிறார்கள். அரசாங்கத்தின் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள். எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளிக்கிறார்கள். தி.மு.க-வில் தலைவருக்கு அடுத்து பெரிய பொறுப்பில் நான் இருக்கிறேன். என்னைப் பயமுறுத்தினால் தி.மு.க-வினர் பயந்துவிடுவார்கள் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள்’’ என்றார்.

அப்போது, ‘‘வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்படுமா?’’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``யாரையோ கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்’’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.