`72 ஆண்டுகளில் சட்டக்கல்லூரியில் ஒரு பழங்குடியின பேராசிரியர்கூடவா இல்லை?' - உயர் நீதிமன்றம் வேதனை | madras hc express displeasure over no st professor in tn law colleges and universities

வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (10/04/2019)

கடைசி தொடர்பு:22:07 (10/04/2019)

`72 ஆண்டுகளில் சட்டக்கல்லூரியில் ஒரு பழங்குடியின பேராசிரியர்கூடவா இல்லை?' - உயர் நீதிமன்றம் வேதனை

நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலைகழகத்திலும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர்கூட பேராசிரியராக நியமிக்கப்படாதது குறித்து உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்

கடந்த 2018 ஜூலை மாதம், தமிழகம் முழுவதும் சட்டக் கல்லூரிகளுக்கு 186 உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதால், அதை ரத்து செய்து, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடக்கோரி குணநிதி, சுவாதி ப்ரியா ஆகியோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். தேர்வு நடவடிக்கைகளில் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.  

சட்டபல்கலைகழகம்

``நாடு சுதந்திரமடைந்த பிறகு, தமிழகத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட சட்டக் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்படவில்லை என்பதை சட்டத்துறை அதிகாரிகளோ, சட்டக்கல்வி இயக்குநரோ, சட்ட அமைச்சரோ கவனிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இட ஒதுக்கீட்டுக் கொள்கை அனைத்து மட்டங்களில் அமல்படுத்தப்படுவதை சட்ட அமைச்சர் உறுதிசெய்ய வேண்டும். ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாடுபடுவதாக அரசியல்கட்சிகள் கூறிக்கொள்ளும் நிலையில், நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் கடந்த விட்டது. பல கட்சிகள் ஆட்சி செய்த போதிலும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக நியமிக்கப்படவில்லை'' என நீதிபதி அதிர்ச்சி தெரிவித்தார். அரசியல் சாசனம் வழங்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை முறையாக அமல்படுத்தாமல், சட்டக் கல்லூரிகளுக்கும், பல்கலைகழகத்துக்கும் அரசியல்சாசன மேதை அம்பேத்கர் பெயர் சூட்டுவதில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அக்கறை காட்டுவதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.