`மோடியால் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!' - சென்னையில் மாயாவதி பேச்சு | Mayawati slams Modi at chennai election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (10/04/2019)

கடைசி தொடர்பு:21:28 (10/04/2019)

`மோடியால் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!' - சென்னையில் மாயாவதி பேச்சு

`பிரதமர் நரேந்திர மோடியால் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது'' என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ்

தமிழகம்,  புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத்  தொகுதிகளில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ,37  தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் 37 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில்  வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய மாயாவதி, ``இந்தியாவில் அதிகமான மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. இப்போது பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது அவர்கள் எடுத்த தவறான நடவடிக்கையால் மத்தியில் மட்டும் அல்ல மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இழந்தது. பா.ஜ.க கட்சி ஆர்.எஸ்.எஸ். மற்றும் உயர்சாதியினருக்கு ஆதரவு உள்ளிட்ட முடிவுகளால் வருங்காலத்தில் அவர்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. பா.ஜ.க எந்த முயற்சி எடுத்தாலும் இனி வெற்றிபெற வாய்ப்பில்லை. பா.ஜ.க ஆட்சியில் மோடி பதவியேற்ற பிறகு சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார். அவர்களது நிலங்கள் பா.ஜ.க அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பகுஜன்

மோடி தேர்தல் பரப்புரையில் விதவிதமான பொய்களைச் சொல்லி மக்களை திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார். புல்வாமா தாக்குதலின்போது கூட தேர்தல் பிரசாரத்தில் இருந்த மோடி, இப்போது மக்களை திசை திருப்ப தேசப்பக்தி என்று நாடகமாடி இருக்கிறார். அவர், தனது ஆடம்பர செலவுக்காக கஜனாவைக் காலி செய்தார்  அதற்குப் பயன்படுத்திய தொகையை ஏழை மக்களுக்குச் செலவு செய்திருக்கலாம். இப்போது தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றுவேன் என்று சொன்ன திட்டத்தை அவர் 5 ஆண்டு கால ஆட்சியில் செய்திருக்கலாம். ஆனால், அவர் 5 ஆண்டுக்காலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவே இருந்தார்.

எனவே, மோடி வாக்குறுதி வாக்காளர்களை ஏமாற்றவே. காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, பா.ஜ.க ஆட்சியிலும் சரி, தலித் மற்றும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை தலித் மக்களுக்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பா.ஜ.க-வால் சிறுபான்மை மக்கள் இடஒதுக்கீடு பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் புத்துணர்ச்சி பெறுமா என்பது கேள்விக்குறி. உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுத்தது தேர்தலை மையப்படுத்தியே. இதைத் தவிர்த்து, அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், இந்தியா வளர்ச்சி அடையும். ஜி.எஸ்.டியால் சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.