`வெற்றி மகிழ்ச்சியிலேயே விரைவில் குணமடைந்து வருவார் கேப்டன்!' - விஜயபிரபாகரன் | vijaya prabakaran election campaign t.kallupatti

வெளியிடப்பட்ட நேரம்: 21:48 (10/04/2019)

கடைசி தொடர்பு:21:48 (10/04/2019)

`வெற்றி மகிழ்ச்சியிலேயே விரைவில் குணமடைந்து வருவார் கேப்டன்!' - விஜயபிரபாகரன்

`தேர்தல் வெற்றி மகிழ்ச்சியிலேயே கேப்டன் விரைவில் குணமடைந்து வருவார். அவர் விரைவில் வெளியே வருவது மக்கள் கையில்தான் உள்ளது' என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

விஜயபிரபாகரன்

விருதுநகர் மக்களவைத் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தே.கல்லுப்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது, ``இது எங்களுடைய பூர்வீகமான தொகுதி. அதனால் கேப்டன் இந்தத் தொகுதியை கேட்டு வாங்கியுள்ளார். கடந்த தேர்தலில் கேப்டன் பிரசாரம் செய்த வாகனத்தில் நான் இப்போது பிரசாரம் செய்கிறேன். கேப்டன் நன்றாக உள்ளார். அவர் விரைவில் குணமடைவது உங்கள் கையில்தான் உள்ளது. நீங்கள் தே.மு.தி.கவை வெற்றி பெறச் செய்து மக்களவைக்கு அனுப்பினால் அந்த மகிழ்ச்சியிலேயே விரைவில் அவர் குணமடைந்து விடுவார். உண்மையான ஒருவிரல் புரட்சி என்பது இந்தத் தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்குதான். தேர்தலுக்கு முன்பே நம்மை பல கட்சிகள் சுரண்டிப் பார்த்தன. இப்போது அவர்களின் நிலைமை எல்லாம் என்ன ஆனது. 2 ஜி-யில் கொள்ளையடித்த பணம் எல்லாம் எங்கே உள்ளது என இப்போது தெரிகிறதா?  கேப்டன் மக்களை ஏமாற்றமாட்டார். எந்தத் தலைவரும் தங்கள் பிள்ளைக்கு பிரபாகரன் என பெயர் வைத்துள்ளார்களா என தெரியவில்லை. ஆனால், எனக்கு பிரபாகரன் பெயர் வைத்துள்ளார். அந்தப் பெயரை நிலைநாட்டுவேன்.

8 வழிச்சாலை குறித்து விவாதம் நடத்தத் தயாரா என அன்புமணியிடம் கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து என்னுடன் விவாதம் நடத்தத் தயாரா? இந்தப் பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. உடல் உழைப்புத் தொழிலாளர்கள் இந்தத் தேர்தலில் அறிவு உழைப்போடு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.