போதைப்பொருள் பயன்படுத்தியதாக 19 மாணவர்கள் சஸ்பெண்டு! - தஞ்சை மருத்துவக் கல்லூரி அதிர்ச்சி | 19 students suspended from Thanjavur medical college

வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (10/04/2019)

கடைசி தொடர்பு:21:39 (10/04/2019)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக 19 மாணவர்கள் சஸ்பெண்டு! - தஞ்சை மருத்துவக் கல்லூரி அதிர்ச்சி

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாகவும், வைத்திருந்ததாகவும் கூறி பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட 19 பேரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி

தஞ்சாவூர்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் பழைமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை பல்வேறு மாநிலங்களில் உள்ள ஏராளமான மாணவர்கள் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். மேலும், தினமும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஏழை நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும், எம்.பி.பி.எஸ்., முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் செவிலியப் படிப்புகளும் உள்ளன. பெரும்பாலும் இங்கு படிப்பவர்கள், பயிற்சி பெறுபவர்கள் வளாகத்தில் உள்ள சுமார் 8 விடுதிகளில் தங்கிதான் பணிகளை மேற்கொள்வர். இதில், சுமார் ஏறத்தாழ 900 மாணவ, மாணவிகள் படித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இங்கு படிக்கும் மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேலும், அவர்கள் பல ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடுவதாக கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் இன்று  திடீரென விடுதியில்  சோதனை நடத்தியது. அப்போது மது, கஞ்சா போன்ற போதைப்பொருள்களை மாணவர்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு இதற்கு காரணமான இளநிலை மருத்துவம் நான்காம் ஆண்டு பயிலும் 4 மாணவர்கள், 5 பயிற்சி மருத்துவர்கள் உட்பட மொத்தம் 19 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

`மருத்துவக் கல்லூரியில் ஒழுங்கான  சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் பயிற்சி மருத்துவர்களே சிகிச்சை அளிக்கிறார்கள்' எனப் புகார் கூறப்பட்டு வந்தநிலையில் பயிற்சி டாக்டர்களே போதைப்பொருள் பயன்படுத்தியதாக சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ``விடுதியில் மாணவர்கள் சிலர் தொடர்ந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ச்சியாக மது அருந்தியதோடு தகராறிலும் ஈடுபட்டனர். அவர்களை 3 முறை எச்சரிக்கை செய்தும் கேட்காமல் தொடர்ந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கல்லூரியில் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவின்படி 19 பேரை 3 முதல் 6 மாதம் வரை சஸ்பெண்டு செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர்கள் கல்லூரிக்கும், விடுதிக்கும் இந்தக் காலகட்டத்தில் வரக்கூடாது'' என தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க