`நாடு பாதுகாப்பாக இருக்க பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்!' - ஜி.கே வாசன் பேச்சு | G.k vasan political campaign at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (10/04/2019)

`நாடு பாதுகாப்பாக இருக்க பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்!' - ஜி.கே வாசன் பேச்சு

நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி அமைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்துக் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ``தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைப் பற்றிப் பேசி ஏமாற்றினார்களே தவிர, அத்திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் முன்வரவில்லை. ஆனால் அ.தி.மு.க அரசு அத்திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது.

மத்தியில் ஆளும் அரசும், மாநிலத்தை ஆளக்கூடிய அரசும் ஒரே கருத்துடன் இருந்தால்தான், நாட்டுக்குத் தேவையான நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சாமானிய மக்களுடன் இயல்பாகப் பழகக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. ஆனால், தி.மு.க கூட்டணி மக்கள் வெறுக்கும் கூட்டணியாகவும், சந்தர்ப்பவாதக் கூட்டணியாகவும் இருக்கிறது. பா.ஜ.க அரசு மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது. இந்திய நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மத்தியில் மீண்டும் பா.ஜ.க-வின் ஆட்சி அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.