‘நள்ளிரவில் கிணற்றில் விழுந்த 4 இளைஞர்கள்!’ - விரைந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் | 'Four young men fallen into the well at midnight!' - firefighters rescue

வெளியிடப்பட்ட நேரம்: 08:06 (11/04/2019)

கடைசி தொடர்பு:08:06 (11/04/2019)

‘நள்ளிரவில் கிணற்றில் விழுந்த 4 இளைஞர்கள்!’ - விரைந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

காட்பாடி அருகே, நள்ளிரவில் கிணற்றில் விழுந்த 4 வடமாநில இளைஞர்களைத் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து உயிருடன் மீட்டனர். அந்த இளைஞர்களை ஒரு கும்பல் சரமாரியாகத் தாக்கி கிணற்றில் தள்ளியதாக, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கிணற்றில் கயிறுகட்டிய இறங்கிய தீயணைப்பு வீரர்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கரசமங்கலம் டி.வி.எஸ் ஷோரூம் அருகில் உள்ள புதர் மண்டிய கிணற்றில், 10-ம் தேதி நள்ளிரவில் 4 வடமாநில இளைஞர்கள் விழுந்துவிட்டதாக, காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்துசென்று, கிணற்றுக்குள் கயிறுகட்டி இறங்கிப் பார்த்தனர். வடமாநில இளைஞர்கள் 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர், வடுகன்தாங்கல் மற்றும் சத்துவாச்சாரியிலிருந்து வரவழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 4 பேரும் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதுபற்றி லத்தேரி போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். 

மீட்கப்பட்ட வடமாநில இளைஞர்கள்

முதற்கட்ட விசாரணையில், ‘‘4 வடமாநில இளைஞர்களும் கரசமங்கலம் வழியாக நடந்துசென்றபோது, பைக்கில் சென்ற உள்ளூரைச் சேர்ந்த இரண்டு நபர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. வடமாநில இளைஞர்கள், அந்த நபர்களைத் தாக்கி விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிலருடன் திரும்பிவந்த அந்த நபர்கள், தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பின்னர் 4 வடமாநில இளைஞர்களையும் புதர் மண்டிய அந்தக் கிணற்றில் தள்ளிவிட்டு ஓடிவிட்டதாகவும்’’ கிராம மக்களில் ஒருசாரார் தெரிவிக்கின்றனர். மற்றொரு தரப்பு, ‘மோதலின்போது வடமாநில இளைஞர்கள் தப்பி ஓடினர். அப்போது, கிணற்றில் தவறிவிழுந்துவிட்டனர்' என்று கூறுகிறார்கள். கிராம மக்கள் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்திருப்பதால், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும், வடமாநில இளைஞர்கள் யார், நள்ளிரவில் அந்தப் பகுதிக்கு எதற்காக வந்தனர்? என்பது பற்றி விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.