கொடநாடு கொலை வழக்கு - மலையாளத்தில் குற்றப்பத்திரிக்கை வாசித்துக்காட்ட ஏற்பாடு! | Kodanadu murder case charge sheet framing malaiyalam

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (11/04/2019)

கடைசி தொடர்பு:09:15 (11/04/2019)

கொடநாடு கொலை வழக்கு - மலையாளத்தில் குற்றப்பத்திரிக்கை வாசித்துக்காட்ட ஏற்பாடு!

கொடநாடு  கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும், 12 -ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். 

கொடநாடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக, கோத்தகிரி அருகே கொடநாட்டில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த எஸ்டேட்டில், கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 -ம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.  இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ்  இருவரும் கைதுசெய்யபட்டனர்.  இந்த வழக்கு, நேற்று  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். அரசு தரப்பில் ஆஜரான 10 பேர்  மீதும் சுமத்தப்பட்ட குற்றங்கள் குறித்த குற்றப்பத்திரிக்கை வாசித்துக் காண்பிக்கப்படும் என பிற்பகல் நீதிபதி வடமலை தெரிவித்தார். கொலைக் குற்றவாளிகள் அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், குற்றப்பத்திரிக்கையை மலையாளத்தில் வாசித்துக்காட்ட பெண் வக்கீல் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.  மாலை 4.30 மணிக்கு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது.

 நீதிமன்றம்

அப்போது, குற்றப்பத்திரிக்கையை வாசித்துக்காட்ட தயார் நிலையில் இருந்தபோது, குற்றவாளிகள் உதயகுமார், மனோஜ்சாமி, பிஜின்குட்டி ஆகியோர் நீதிபதி வடமலையிடம், '‘நாங்கள் அனைவரும் பாவப்பட்டவர்கள். இந்தக் கொலை வழக்கில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. இந்த வழக்கில் இருந்து எங்களை  விடுவிக்க வேண்டும். எங்களை வழக்கிலிருந்து விடுவிக்ககோரி, ஏற்கெனவே நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தோம். ஆனால், எங்களுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல், எங்களது வக்கீல் வாபஸ்பெற்றுள்ளார். அவர்மீது சந்தேகம் உள்ளது. எனவே, நாங்கள் வேறு வக்கீலை வைத்துக்கொள்கிறோம். அதுவரை அவகாசம் அளிக்க வேண்டும்'’ என்றனர். அப்போது, அரசு தரப்பு வக்கீல் பால நந்தகுமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, குற்றப்பத்திரிக்கையை வாசிக்க வேண்டும் என்றார். குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், ''வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அவர்கள் மீண்டும் மனு செய்யும் வரையும், வேறு வக்கீல் நியமிக்கும் வரையும் அவகாசம் அளிக்க வேண்டும்'' என்றார். 

போலீஸ்


இதனைக் கேட்ட நீதிபதி வடமலை, இந்த வழக்கை வரும் 12 -ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால்,  குற்றவாளிகள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை வாசித்துக்காட்ட முடியாத நிலை ஏற்பட்டது.