``மே 23 - ம் தேதி தமிழக மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி காத்திருக்கிறது!” - சீதாராம் யெச்சூரி | Sitaram yechuri election campaign at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (11/04/2019)

கடைசி தொடர்பு:09:35 (11/04/2019)

``மே 23 - ம் தேதி தமிழக மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி காத்திருக்கிறது!” - சீதாராம் யெச்சூரி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி , நேற்று திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

சீதாராம் யெச்சூரி

பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ``மத்தியில் நிலையான ஆட்சி அமைய, மக்கள் மீண்டும் பி.ஜே.பி-க்கு வாக்களிக்க வேண்டும் என நரேந்திர மோடி பிரசாரம் செய்துவருகிறார். ஆனால், கடந்த 5 ஆண்டு கால நிலையான ஆட்சியில் அவரது அரசு என்ன செய்தது என்று அவரால் சொல்ல முடியுமா? அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட மோடி அரசு நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், நாட்டில் பசுக் காவலர்கள் என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மை சமுதாய மக்கள்மீது எண்ணற்ற கொடூரத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளன.

ஆனால், இப்போது தன்னை ஒரு காவலாளி என சொல்லிக்கொண்டிருக்கிறார் மோடி. முதலில், இந்தியாவின் காவலாளி என்று சொன்னவர், பிறகு விண்வெளியின் காவலாளி என்று தன்னைக் கூறிக்கொண்டார். அதன்பிறகு, இந்தப் பிரபஞ்சத்துக்கே நான் காவலாளி என்றும் சொன்னார். அவர், மற்ற பிற கிரகங்களுக்கேகூட காவலாளியாக இருந்துகொள்ளட்டும். அப்போதுதான் இந்தியா பாதுகாக்கப்படும். மே 23 - ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, தமிழக மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கிடைக்கப்போகிறது. அன்றைய தினம், மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்படும். அதேசமயம், தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும் அகற்றப்படும். அதற்கான சூழலை தமிழகத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் உருவாக்கும்” என்றார் நம்பிக்கையுடன்