‘வேலூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் தேர்தல் விதிமீறல்!’ -காத்திருந்து கடுப்பான தொண்டர்கள் | Premalatha Vijayakanth in Vellore election violation - wait and worry volunteers

வெளியிடப்பட்ட நேரம்: 08:37 (11/04/2019)

கடைசி தொடர்பு:10:20 (11/04/2019)

‘வேலூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் தேர்தல் விதிமீறல்!’ -காத்திருந்து கடுப்பான தொண்டர்கள்

வேலூரில், இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த்தால் அ.தி.மு.க கூட்டணி கட்சியினர் அதிருப்தியடைந்தனர். மேலும், தேர்தல் நடத்தை விதியை மீறி பட்டாசு வெடித்த தே.மு.தி.க நிர்வாகிகள்மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

மௌனமாக வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 10-ம் தேதி இரவு பிரசாரம் மேற்கொண்டார். வேலூர் சார்பனாமேடு பகுதியில், இரவு 8 மணிக்கு வாக்கு சேகரிக்க வருவதாக அறிவிக்கப்பட்டதால், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 1000 பேர் குவிந்தனர். பாட்டுக் கச்சேரியும் நடைபெற்றது. ‘பிரேமலதா இதோ வருகிறார், அதோ வந்துவிட்டார்’ என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூப்பாடுபோட்டனர். ஆனால், இரவு 10 மணி ஆகியும் பிரேமலதா பிரசாரப் பகுதிக்கு வரவில்லை. கால்வலிக்கக் காத்திருந்த தொண்டர்கள் கடுப்பாகி, கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்துசென்றனர்.

இரவு 10.15 மணிக்கு பிரேமலதா வந்தார். 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது என்பதால், மைக்கில் பேசாமல் வாயைக்கூட அசைக்காமல் விரல்களைக் காட்டி இரட்டை இலை சின்னத்துக்கு மௌனமாக வாக்கு சேகரித்தார். பிரேமலதா அருகிலிருந்த வேட்பாளர் ஏ.சி.சண்முகமும் வாய் திறக்காமல் மௌனமாகவே கை அசைத்தார். தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது, தேர்தல் நடத்தை விதியை மீறி சரவெடி பட்டாசுகளைக் கொளுத்திப்போட்டனர். இது சம்பந்தமாக,. பிரசார ஒருங்கிணைப்பாளரான தே.மு.தி.க மத்திய மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸார் முடிவுசெய்துள்ளனர். ஆனால், ஆளும்கட்சி அழுத்தம் காரணமாக நடவடிக்கையைத் தவிர்க்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர் விவரம் தெரிந்த சிலர்.