``எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்து தலைவர் ஸ்டாலின் கெஞ்சினார்!” - கலங்கிய உதயநிதி ஸ்டாலின் | Why was Stalin caught in the hands of Chief Minister Edappadi Palanisamy to fulfill Karunanidhi's last wish? - Explains Udhayanidhi Stalin.

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (11/04/2019)

கடைசி தொடர்பு:10:00 (11/04/2019)

``எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்து தலைவர் ஸ்டாலின் கெஞ்சினார்!” - கலங்கிய உதயநிதி ஸ்டாலின்

'தாத்தாவின் கடைசி ஆசையைக் காப்பாற்ற, எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்து, தலைவர் ஸ்டாலின் கதறினார்'' எனக் கலங்கியபடி தெரிவித்தார், உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, நடிகர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி குண்டூர், விமான நிலையம், திருச்சி பீமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சி ஏர்போர்ட் பகுதியில் சாருபாலா தொண்டைமான் பிரசாரம் மேற்கொண்டதால், அதே வழியில் உதயநிதியின் வருகையும் பெரும்பரபரப்பை  உண்டாக்கியது.

பிரசார கூட்டங்களில் பேசிய உதயநிதி, “கடந்த 18 நாள்களாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை பிரசாரம் செய்துவருகிறேன். இந்தப் பயணத்தில், நான் போகிற இடங்களிலெல்லாம் பொதுமக்கள், பெண்கள் எனப் பலரும் உற்சாகமாக வரவேற்கிறார்கள். பல இடங்களில் நீங்கதான் ஜெயிச்சிட்டீங்கன்னு வெற்றித் திலகமிட்டு அனுப்பிவைக்கிறார்கள். ஏராளமான இடங்களில், அ.தி.மு.க-வினரும் நம்மை வாழ்த்தினார்கள். அப்போது அ.தி.மு.க-வினர், நாங்கள் தெரியாமல் மாட்டிக்கொண்டோம், அம்மா உயிரோடு இருந்தவரை எங்களுக்கு மரியாதை இருந்தது. இப்போது, அதையெல்லாம் இரண்டு அடிமைகள் மோடியிடம் அடகுவைத்துவிட்டார்கள். அம்மாவுக்குப் பிறகு மோடிதான் எங்களுக்கு டாடி என்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதை எல்லாம் எப்படி பொறுத்துக்கொள்வது என்றனர்.

கடந்த ஐந்துவருட ஆட்சியில், மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம். ஜிஎஸ்டி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களால் பொதுமக்கள், வியாபாரிகள்  பாதிக்கப்பட்டார்கள். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக மோடி கூறினார். அந்த வேலை எங்கே எனக் கேட்டால், 'பக்கோடா' விற்கச் சொல்கிறார். இந்த மக்கள் விரோத திட்டங்களால் 10 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எந்த அரசியல் சார்பும் இல்லாமல் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை ஒடுக்கத் திட்டமிட்ட அரசு, மாணவி ஸ்னோலின் உட்பட 13பேரை சுட்டுக் கொன்றார்கள். கலவரத்தை அடக்கவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அரசு விளக்கம் அளித்தது. இத்தனை பேர் பலியானதற்கு, இந்திய பிரதமர் மோடி ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. அப்படிப்பட்ட மோடிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?  வரும் ஏப்ரல் 18, மோடிக்கு கெட் அவுட்டு.

நீட் தேர்வை ரத்துசெய்வதாகக் கூறி, மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சகம் செய்தது. நீட் இல்லாமல் இருந்திருந்தால், நமது தங்கை அனிதா இறந்திருக்க மாட்டார். அனிதாவைப்போன்று நம் வீட்டிலும் ஒரு தங்கை இருந்து மறைந்திருந்தால் நாம் என்ன செய்வோம்...

தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில்  கதாநாயகன். ஒரு படத்தில் கதாநாயகன் இருந்தால் நிச்சயம் வில்லன் இருப்பார். அவர்களுக்கு இரண்டு பேர் எடுபிடிகள் இருப்பார்களே, அதைப் போலத்தான் வில்லன் மோடிக்கு, எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அன்புமணி ராமதாஸ், ஸ்டாலினுக்கு முளைத்திருக்கும் 'கொடுக்கு' என என்னைக் கூறியுள்ளார்.  இந்தக் கொடுக்கு கொட்டினால் தலைக்கு ஜிவ்வினு ஏறுது இல்ல. தமிழக அரசியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பி.எஸ்ஸையும் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த அன்புமணியும் - ராமதாஸும்  அவர்களோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

பா.ம.க மாநில துணைத் தலைவராக இருந்த பொங்கலூர்  மணிகண்டன், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ்ஸை கடுமையாக விமர்சனம்செய்துவிட்டு, இப்போது அவருடன் சேர்ந்திருப்பதை மக்கள் மிகவும் மோசமாகப் பார்க்கிறார்கள். அதனால், பா.ம.க-வில் இருந்து விலகுவதாகக் கூறி கடிதம் கொடுத்துள்ளார்.  அவருக்கு அன்புமணி  என்ன  பதில் சொல்லப்போகிறார்.

எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வர் பதவி வாங்கினார் என்பதும், 10 மாதக் குழந்தை போல தவழ்ந்து தவழ்ந்து பதவியேற்றது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது இரண்டு வருட ஆட்சியில் முப்பத்தைந்தாயிரம் போராட்டங்கள் நடைபெற்றதாகக் கூறுகிறார்.  

திருச்சியில் உதயநிதி பிரசாரம்

அவர், இரக்கமற்றவர் என்பதற்கு ஒரு சான்று. தமிழர்களுக்காக வாழ்ந்தவர், ஐந்து முறை முதல்வரால் தமிழக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  கருணாநிதி,  95 வயதில் முதுமை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும், அவர் உடல் நலம் பெறவேண்டும் என கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் காவேரி மருத்துவமனை வாசலில் பல நாள்கள் காத்துக்கிடந்தார்கள். 'எழுந்து வா, தலைவா வா! 'என அவர்கள் முழங்கிய கோஷம் கேட்டு, மரணத்தை வென்று தலைவர் எழுந்துவர மாட்டாரா என ஏங்கினோம்.

அவரைக் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தாங்க முடியாத  துயரத்தில் இருந்தாலும், தமிழ் மக்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்து, தன் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்கள்தான்  என வாழ்ந்த தலைவர் கருணாநிதி உயிருக்குப் போராடிய நிலையில், அவரின் கடைசி ஆசையான, அவர் தலைவராக ஏற்றுக்கொண்ட அண்ணாவின் காலடியில் தன்னையும் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, எதிரியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்துக்கூட தலைவர் ஸ்டாலின் கெஞ்சினார். போங்க பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அனுப்பிவிட்டு, அடுத்த கொஞ்ச நேரத்தில் இடம் மறுக்கப்படுகிறது என அறிக்கை வெளியிட்டார்கள். இந்த விஷயத்தில், மத்திய அரசும் மிக மோசமாகக் காய்நகர்த்தியது.

ஒட்டுமொத்த தமிழக மக்களும் கலங்கிநின்ற நிலையில், கலங்காமல் நின்று விடிய விடிய நீதிமன்றத்தில் வழக்காடி, சட்டப்போராட்டம் நடத்தி, தலைவர் கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்றினார். அப்படிப்பட்ட இந்த இறக்கமற்ற ஆட்சி அகற்றப்பட வேண்டும். நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை 'மிஸ்' பண்ணிடாதீங்க” என்று முடித்தார்.