``ஜூனில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வர்!" - உதயநிதி ஸ்டாலின் உறுதி | Stalin will become CM by june month, says Udhayanidhi Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (11/04/2019)

கடைசி தொடர்பு:10:29 (11/04/2019)

``ஜூனில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வர்!" - உதயநிதி ஸ்டாலின் உறுதி

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெறும். அந்த வெற்றியைத் தன் தாத்தாவான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு செலுத்த உள்ளதாகவும், ஜூனில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி

திருச்சி பாராளுமன்றத் தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் திருநாவுக்கரசருக்கு ஆதரவாக, உதயநிதி ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார். உதயநிதி ஸ்டாலின் வந்தபோது, வேட்பாளர்  அங்கு இல்லை. கந்தர்வகோட்டை பகுதியில் வாக்குகள் சேகரித்துக்கொண்டிருந்தார். அவர் வர தாமதமாகும் என்று கூறி, வேட்பாளர் பெயரைக் கூறிவிட்டு பேச ஆரம்பித்தார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை பகுதிகளில் அதிக வாக்களர்கள் உள்ளனர். ஏற்கெனவே, இங்குள்ள பகுதிகளில் திருநாவுக்கரசரை ஆதரித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் யாரும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இது திருநாவுக்கரசருக்கு மைனஸாக அமைந்துள்ளது என  உட்கட்சி நிர்வாகிகளே பேசிக்கொள்கின்றனர்.

பிரசாரம்

கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மோடி தலைமையிலான மத்திய அரசையும், ஈபிஎஸ், ஓ.பி.எஸ் தலைமையிலான மாநில அரசையும் விரட்ட வேண்டும். ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்றார்கள். அது நடக்கவே இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 150 பேர் இறந்ததுதான் நடந்தது. மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.5 ஆயிரம் கோடி, அவர் அணியும் சட்டையின் விலை ரூ.15 லட்சம். ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தி, உள்ளூர் தொழில்களை அழித்து, பலரையும் வேலை  இழக்கச் செய்ததுதான் அவர்களின் சாதனை. கஜா புயல் பாதித்தபோது மோடி வரவில்லை. ஆனால், ஓட்டுக்காக தற்போது வருகிறார்.

95 வயது வரையிலும் மக்களுக்காக உழைத்தவர் தாத்தா கருணாநிதி. மருத்துவர்கள் எங்களை அழைத்து இன்னும் சில மணி நேரத்தில் தாத்தாவின் உயிர் பிரியப்போகிறது என்றார்கள். தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அப்பா சந்தித்தபோது, மெரினாவில் இடம் தர முடியாது என மறுத்தனர். விடிய விடிய நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, இறந்த பிறகும் போராடி, அதில் தாத்தா வெற்றிபெற்றார்.

நாடாளுமன்றத் தேர்தல்,சட்டமன்றத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெறும். அந்த வெற்றியைத் தாத்தா கருணாநிதிக்கு சமர்ப்பித்து அஞ்சலிசெலுத்துவோம். வரும் ஜூனில் கலைஞர் பிறந்தநாளில்,  மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி" என்றார்.