திருத்தணி இரட்டைக்கொலையில் சிக்கிய கைரேகைகள்! - பால்காரரிடம் தாெடரும் விசாரணை | Thiruttani double murder case

வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (11/04/2019)

கடைசி தொடர்பு:16:06 (12/04/2019)

திருத்தணி இரட்டைக்கொலையில் சிக்கிய கைரேகைகள்! - பால்காரரிடம் தாெடரும் விசாரணை

திருத்தணி இரட்டைக்கொலையில், ஐந்து கைரேகைப் பதிவுகளை காவல் துறையினர் எடுத்துள்ளனர். மேலும், பால்காரரைப் பிடித்து தாெடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மனைவியுடன் காவலாளி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பெருமாள் தாங்கல் புதூர் கிராமம், பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர், வனப் பெருமாள். இவர், தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலைசெய்துவருகிறார். இவரது மனைவி விஜியலட்சுமி, மகன் போத்திராஜ். இவர்கள் இருவரும் வீட்டில்  தனியாக இருந்துள்ளனர். வனப்பெருமாள், சம்பவத்தன்று பணிக்குச் சென்ற நேரத்தில் இருவரும் தனியாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்த  முகமூடி அணிந்த மர்ம நபர்கள், விஜியலட்சுமியின் கழுத்து மற்றும் தலையை வெட்டியதோடு, போத்திராஜின்  கழுத்தை நெரித்துக் கொலைசெய்துள்ளனர்.

விஜியலட்சுமியின் கழுத்தில் கிடந்த தாலி  மற்றும்  வீட்டின் பீரோவில் வைத்திருந்த  26 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இரவுப்பணி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த வனப் பெருமாள், வீட்டின் கதந்த் தட்டியபோது, நீண்ட நேரமாகத் திறக்கவில்லை. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, மனைவியும் மகனும் இறந்துகிடந்தது தெரிந்தது.  இதுகுறித்து திருத்தணி போலீஸாருக்கு வனப்பெருமாள் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீஸார், விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பொன்னி, 5 தனிப்படைகள் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் பணத்திற்காகக் கொலைசெய்தது தெரியவந்தது. கொலைக்கான உண்மைக் காரணம் என்ன என்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

தேர்தல் நேரம் என்பதால், போலீஸார் ரோந்துப் பணி செல்லாமல் இருந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், அந்தப் பகுதியில் இந்த வீட்டில் நுழைந்து கொள்ளையடித்துக் கொலையும் செய்துள்ளனர். இந்நிலையில், தனிப்படை போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள பால்காரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து, ரகசிய இடத்தில்வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால், கொலையாளி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.  வனப்பெருமாளின் செல்போன் காணாமல் போயுள்ளது. அந்த எண்ணுக்கு போன் செய்தால், வேறு நபர் எடுப்பதாக போலீஸார் கூறுகின்றனர். வீட்டில் இருந்த 5 கைரேகைப் பதிவுகளை எடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் பலமுறை திருட்டு நடந்துள்ளன.

இதுதவிர, திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு, புட்லூர்  ஆகிய பகுதிகளில், வீடு புகுந்து கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.  அதேபோல மணவாளநகர், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளிலும் திருட்டு நடைபெற்றுவருகிறது. தேர்தல் நேரம் என்பதால், போலீஸார் வாகனச் சோதனை செய்துவருகிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த கொலைச் சம்பவம், அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.