`உங்க ஆட்கள் கரெக்டா இருந்தால் ஏன் இப்படி நடக்குது!'-மு.க.ஸ்டாலினைச் சாடும் முதல்வர் எடப்பாடி | CM attacked Stalin in his campaign

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (11/04/2019)

கடைசி தொடர்பு:11:39 (11/04/2019)

`உங்க ஆட்கள் கரெக்டா இருந்தால் ஏன் இப்படி நடக்குது!'-மு.க.ஸ்டாலினைச் சாடும் முதல்வர் எடப்பாடி

''கண்ணுக்குத் தெரியாத காற்றிலும்கூட ஊழல் செய்தவர்கள் தி.மு.க-வினர். நாங்கள் ஊழல்வாதி என்று சொல்வதற்கு , அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஸ்டாலின் தோல்வி பயத்தால் என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசுகிறார்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

                                             முதல்வர் எடப்பாடி பிரசாரம்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சிவபதியை ஆதரித்து, பெரம்பலூர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ``மத்தியிலே நிலையான ஆட்சி, திறமையான பிரதமரைத் தேர்ந்தெடுக்கின்ற தேர்தல் இந்த தேர்தல். ஸ்டாலின் சொல்கிறார், முதல்வர் போற இடமெல்லாம் கூட்டம் இல்லை என்று. இந்தக் கூட்டத்தில், கடல்போல் காத்திருக்கின்ற காட்சியை நீங்கள் டிவி-க்களில் பாருங்கள். நாடு நலம் பெற, நாடு செழிக்க, நாடு பாதுகாப்பாக இருக்க மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும். 

                                         முதல்வர் பிரசாரத்தில் கூடிய கூட்டம்
தி.மு.க தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்தஅறிக்கை பொய்யான, போலியான தேர்தல் அறிக்கை. கடந்த தேர்தலில், தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 2 ஏக்கர் நிலம் எத்தனை பேருக்குக் கொடுத்தனர். நிலம் இருந்தால்தானே கொடுக்க முடியும். ஸ்டாலின், மக்களைக் குழப்பி, ஓட்டுகளைப் பெற நினைக்கிறார். பச்சைப்பொய். ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் அம்மாவுடைய அரசு நிறைவேற்றிவருகிறது. வைகோவுடன் ஸ்டாலின் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளார்.

                                        முதல்வரின்  பேச்சை கேட்க வந்த கூட்டம் 
இங்க ஒருத்தர் இருக்காரு, பெரம்பலூர் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ராஜா. காற்றுல அழகா எல்லா  கொடியும் பறக்கிறது பாருங்கள். கண்ணுக்குக் காற்று தெரியுதா. கண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட ஊழல் செய்தவர்கள் தி.மு.க-காரங்க. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். இப்படி ஊழல் செய்தவர்கள், எங்களைப் பார்த்து ஊழல் செய்கிறவர்கள் எனக் கூறுவதற்கு என்ன அருகதை உள்ளது. பாவம், அவர்கள் தோல்வி பயத்தால் என்னென்ன சொல்லமுடியுமே அதை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

                                         பெரம்பலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பிரசாரம்
இப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், பாலியல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனைபெற்று சிறையில் உள்ளார். பெரம்பலூர் தி.மு.க நிர்வாகி ஒரு பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கியது போன்ற சம்பவங்கள் நடந்தன. இவ்வளவு பிரச்னைகளை வைத்துக்கொண்டு, அ.தி.மு.க ஆட்சியில் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன எனப் பேசுகிறார் ஸ்டாலின். உங்க ஆட்கள் கரெக்டா இருந்தால், ஏன் இப்படி நடக்குது? 

                                               முதல்வர் பிரசாரத்தில் கூடிய கூட்டம்
அ.தி.மு.க அரசு மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே ஸ்டாலின் மதுரைக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், இப்போது மதுரைக்குச் சென்றுவந்துள்ளார்.  நாங்கள் ஆட்சியில் உள்ளோம். நாங்கள் நினைத்தால், கடனைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால், ஆட்சியில் இருப்பதுபோல நினைத்து, முதல்வராகத் தன்னைக் கருதி, அனைத்து கடனையும் தள்ளுபடிசெய்வோம் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இப்படி அறிவித்து, மக்களைக் குழப்பி, ஓட்டுகளைப் பெற நினைக்கிறார். அவரின் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகள். எங்களின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும். தைப்பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்கப்பட்டது. சாதாரண மக்களுக்கு கிடைக்கக்கூடிய 2000 ரூபாயைக்கூட மு.க.ஸ்டாலின் தடுத்துவிட்டார். தேர்தல் முடிந்தவுடன் 2000 ரூபாய் வழங்கும் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும். மத்தியிலே நிலையான ஆட்சி, திறமையான பிரதமரைத் தேர்ந்தெடுக்க இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்'' என்று முடித்தார்.