`அவர்களைப் பிரசாரத்துக்கு கூப்பிடாதீங்க!'- அமைச்சர்களின் செயலால் நட்சத்திரப் பேச்சாளர்கள் வேதனை | ministers not interest in star campaigners

வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (11/04/2019)

கடைசி தொடர்பு:12:07 (11/04/2019)

`அவர்களைப் பிரசாரத்துக்கு கூப்பிடாதீங்க!'- அமைச்சர்களின் செயலால் நட்சத்திரப் பேச்சாளர்கள் வேதனை

தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், அ.தி.மு.க ஸ்டார் பேச்சாளர்களை பிரசாரத்துக்கு இனிமேல் அழைக்க வேண்டாமென அமைச்சர்கள் சிலர் கூறியிருப்பது கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க ஸ்டார் பேச்சாளர்கள் சிலர், “கரூர், திருப்பூர் தொகுதிகளில் பிரசாரம் செய்ய ஸ்டார் பேச்சாளர்களை இனிமேல் அழைக்க வேண்டாமென போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனும் கூறியுள்ளனர். தூத்துக்குடி, தென்காசியிலும் ஸ்டார் பேச்சாளர்களை பிரசாரத்துக்கு அழைக்க அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு ஆகியோருக்கு விருப்பமில்லை.

பஸ் பாடி கட்டும் தொழிற்சாலைகளிடம் இருந்து தேர்தல் நிதியாக 60 கோடி ரூபாய் வசூலித்த ஒரு அமைச்சர், எங்களை பிரசாரத்துக்கு அழைக்கவே யோசிக்கிறார். ஜெயலலிதா இருந்திருந்தால், பேச்சாளர்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்குமா? ‘ஒரு ஸ்டார் பேச்சாளர் வந்து சென்றாலே குறைந்தது ஒரு லட்ச ரூபாய் ஆகிவிடுகிறது. தேர்தல் ரிசல்ட் எப்படி வரப்போகிறது என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் தேவையில்லாமல் செலவுசெய்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்’ என அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இதனால், எங்களை பிரசாரத்துக்கு அழைக்க மாவட்டச் செயலாளர்கள் மறுக்கிறார்கள்” என்று பொருமினார்கள்.

அமைச்சர்கள் தரப்பில் பேசியபோது, “அ.தி.மு.க-வில் சுமார் 20 ஸ்டார் பேச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் ஐந்து பேருக்குதான் தேர்தல் கமிஷனின் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பாஸ் கிடைக்காத பலர் அதிருப்தியில் உள்ளனர். ஒவ்வொரு ஸ்டார் பேச்சாளரும் பிரசாரம் முடிந்து செல்லும்போது, குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் கவரில் வைத்து கொடுக்க வேண்டும். இன்றைய சூழலில், அதை செலவழிக்கும் நிலையில் வேட்பாளர்களோ, மாவட்ட நிர்வாகிகளோ இல்லை. அதனால்தான், செலவைக் கட்டுப்படுத்தும் விதமாக  இனிமேல் ஸ்டார் பேச்சாளர்களை வைத்து பிரசாரம் செய்ய வேண்டாம் என சில மாவட்டங்களில் முடிவெடுத்துள்ளனர்” என்றனர்.