‘இந்தப் பிரசாரம் அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது!'- மக்களை அழைக்கும் சமூக ஆர்வலர் | American method of campaign honk for HPF

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (11/04/2019)

கடைசி தொடர்பு:12:50 (11/04/2019)

‘இந்தப் பிரசாரம் அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது!'- மக்களை அழைக்கும் சமூக ஆர்வலர்

தமிழகத்தில், வரும் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நீலகிரி தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் ஆ.ராசா, அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன், அ.ம.மு.க.வேட்பாளர் ராமசாமி, சுயேச்சைகள் உள்ளிட்ட பலரும் மக்களைச் சந்தித்து நீலகிரி தொகுதியில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகளை வாக்குறுதிகளாக வழங்கிவருகின்றனர்.

 போட்டோ பிலிம் தொழிற்சாலை

நீலகிரிக்குப் பல்நோக்கு மருத்துவமனை வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில், தெற்கு ஆசியாவிலேயே ஒரே போட்டோ ஃபிலிம் தயாரிக்கும் ஆலையான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இங்கு, தயாரிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை ஃபிலிம்கள் மற்றும் எக்ஸ்ரே ஃபிலிம்கள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டன. 1990ல் உலக மயமாக்கல் கொள்கையால், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி வைக்கவே, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஃபிலிம்களின் மவுசு குறையத் தொடங்கியது. இதனால், ஹெச்.பி.எஃப். தொழிற்சாலை நஷ்டத்திற்குத் தள்ளப்பட்டது. தற்போது  உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு, தொழிற்சாலை மூடப்பட்டது. இந்தக் கட்டடத்தைப் பல்நோக்கு மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தன. இதை முன்னெடுக்க மக்களை புதிய முறையில் அழைத்துள்ளார், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன்.

சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன்.

நம்மிடம் அவர், “மலை மாவட்டமான நீலகிரி, தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. அடிப்படை வசதிகளைப் பெறவே பல போராட்டங்களைச் சந்திக்கவேண்டி உள்ளது. 6 லட்சம் மக்கள் உள்ள இந்த மாவட்டத்தில், மருத்துவ சேவை இன்னும் போதுமானதாக இல்லை. மேல் சிகிச்சைக்கு கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்லவேண்டிய அவலநிலை நீடிக்கிறது. ஊட்டியில் ஒருகாலம் கொடிகட்டிப் பறந்த மத்திய அரசின் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை தற்போது மூடப்பட்டு, கட்டடங்கள் சிதிலமடைந்து வருகின்றன. மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது. பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை கட்டடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

இதை அரசிடமும் மக்களிடமும் சேர்க்க புதிய முயற்சியை மேற்கொண்டோம். அதுதான், ‘ஹான்க் ஃபார் ஹெச்.பி.எஃப்’ ஹான்க் என்ற பிரசார முறை, அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியது. ’ஹான்க் ‘  என்பது, ஒரு விஷயத்தில் மக்களுக்கு நானும் ஆதரவு எனச் சொல்வது. தற்போது தேர்தல் சமயம். நீலகிரி மக்களுக்கு இப்போதைய உடனடித் தேவை, பல்நோக்கு மருத்துவமனை. எனவே, இதனை முன்னெடுத்து வானங்களில் ஒட்டக்கூடிய ஸ்டிக்கரை வடிவமைத்துள்ளோம். மக்கள் பலரும் வாகனங்களில் ஒட்டி மக்களிடமும் அரசிடமும் கொண்டுசேர்ப்பதே நோக்கம். தற்போது, இந்தப் பிரசார முறையைத் தொடங்கியுள்ளோம். மக்கள் ஆதரவும் அளித்துவருகின்றனர்” என்றார்.