காதலன் அனுப்பிய வாட்ஸ்அப் வீடியோ!-  காதலி எடுத்த விபரீத முடிவு  | lovers suicide in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (11/04/2019)

கடைசி தொடர்பு:15:41 (11/04/2019)

காதலன் அனுப்பிய வாட்ஸ்அப் வீடியோ!-  காதலி எடுத்த விபரீத முடிவு 

காதலன்

காதலன் அனுப்பிய வாட்ஸ்அப் வீடியோவைப் பார்த்த காதலி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். வடசென்னையில் நடந்த காதல் ஜோடியின் தற்கொலை சம்பவங்கள் உறவினர்களையும் பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னை ராயபுரம், பனைமரத்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்நாத். காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). ப்ளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார். பிரேம்நாத்துக்கும் பவித்ராவுக்கும் படிக்கும் காலத்தில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் நட்பாகப் பழகினர். அது, காதலாக மலர்ந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பிரேம்நாத்துக்கும் பவித்ராவுக்கும் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் மனவருத்தத்தில் இருந்துள்ளனர். மனம்விட்டு இருவரும் பேசவில்லை. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார் பிரேம்நாத். 

காதலன் தூக்கில் தொங்கிய தகவலைக் கேட்டு பவித்ரா கதறி துடித்தார். அதன்பிறகு அவரும் சாப்பிடாமல் மனவருத்தத்தில் இருந்துள்ளார். 9-ம் தேதி இரவு 9.30 மணிக்கு மூன்றாவது மாடிக்குச் சென்ற பவித்ரா, அங்கிருந்து கீழே குதித்தார். தலையில் படுகாயமடைந்து உயிருக்குப்போராடிய பவித்ராவை, மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா, இரவு 12 மணியளவில் இறந்தார். இதுகுறித்து காசிமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 காதலன்

காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் காசிமேடு, ராயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரேம்நாத் வீட்டுக்குச் சென்றோம். பிரேம்நாத்தின் உறவினர்கள், `நாங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரேம்நாத் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டான்' என்றனர். பவித்ராவின் வீட்டுக்குச் சென்றபோது அவரின் உறவினர்கள், `அவள் இல்லாத வீடு வெறிச்சோடி கிடக்கிறது' என்று பவித்ராவின் புகைப்படத்தை காட்டி கதறினர். அதன்பிறகு அவர்களால் பேச முடியவில்லை. 

இந்தச் சம்பவம் குறித்து காதல் ஜோடியின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். ``இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்துவந்தனர். இவர்களின் காதல், இருவீட்டினருக்கும் தெரியும். திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில்தான் இருவரும் தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் எதற்காக இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. திருமணத்துக்குப் பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்படாத தகவலைச் சொல்கிறார்கள். பவித்ராவும் பிரேம்நாத்தும் எப்படியெல்லாம் காதலித்தார்கள் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அவர்களை இழந்து தவிக்கிறோம்'' என்றனர். 

 காதல் ஜோடி தற்கொலை

காசிமேடு, ராயபுரம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``காதல் பிரச்னையில் பிரேம்நாத் தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலை குறித்து விசாரித்துவந்த நேரத்தில்தான் பவித்ராவும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். பிரேம்நாத் இறப்பதற்கு முன் பவித்ராவுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ மற்றும் ஆடியோ அனுப்பியுள்ளார். அதில்,  ``நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா,  இனி நாம் இருவரும் பிரிந்துவிடுவோம்” என்று கூறியுள்ளார். 

தூக்கில் தொங்குவதற்கு முன், அந்தச் சம்பவத்தையும் வீடியோவாகவும் எடுத்துள்ளார். வீடியோ, ஆடியோவைக் கேட்டு பவித்ரா அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக பிரேம்நாத்துக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்துதான் பிரேம்நாத் தற்கொலை செய்த தகவலைக் கேட்டு பவித்ராவும் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காதல் ஜோடிக்கு என்ன பிரச்னை என்று அவர்களின் உறவினர்களிடம் விசாரித்துவருகிறோம்'' என்றனர். 

 காதல் ஜோடி தற்கொலை

பவித்ரா மற்றும் பிரேம்நாத் ஆகியோரின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் இருவரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் ஒரே இடத்தில் ஓட்டப்பட்டிருந்தன.பவித்ராவின் அஞ்சலி போஸ்டரில் ஆட்டோ ஓட்டுநர் அகிலாவின் மகள் பவித்ரா, அகால மரணம் அடைந்தார் என்றும் அவரின் இறுதி ஊர்வலம் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் நடப்பதாகவும்  ஜார்ஜ்கோட்டை ஆட்டோ நண்பர்கள் சார்பில் ஓட்டப்பட்டிருந்தது. அதுபோல பிரேம்நாத்தின் அஞ்சலி போஸ்டரில் காசிமேடு மயானத்தில் இறுதி அஞ்சலி நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேம்நாத்துக்கு 9-ம் தேதி இறுதி அஞ்சலி நடந்தது. பவித்ராவுக்கு 10-ம் தேதி இறுதி அஞ்சலி நடத்தப்பட்டது. 

தற்போது காதல் ஜோடி குடியிருந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக போலீஸ் தரப்பில் ரிப்போர்ட் போடப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு உறவினர்களிடமும் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். காதல் விவகாரத்தில் காதலர்கள் தற்கொலை செய்த சம்பவத்தில் மோதல் நடைபெறாமல் இருக்க போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.