`காசுக்கு வாக்கை விற்கவில்லை, வாழ்க்கையை விற்கிறோம்!'- பிரசாரத்தில் சீமான் ஆவேசம் | We do not sell the vote for our money, we sell our life! '- Seeman's advice

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (11/04/2019)

கடைசி தொடர்பு:14:00 (11/04/2019)

`காசுக்கு வாக்கை விற்கவில்லை, வாழ்க்கையை விற்கிறோம்!'- பிரசாரத்தில் சீமான் ஆவேசம்

"வாக்கு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னத்தை மங்கலாகப் போட்டு சின்னத்தையே மறைக்கிறார்கள். உங்களால் எங்கள் சின்னத்தைத்தான் மறைக்க முடியும். ஆனால் எங்களை மறைக்க முடியாது" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்  சாட்டினார்.

சீமான்

அரியலூர் ஆயிரங்கால் மண்டபத் தெருவில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவஜோதியை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "எல்லோரும் சொல்கிறார்கள் ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம் என்று. ஆனால், அவர்களோடுதான் அனைத்துக்கட்சிகளும் கூட்டணிவைத்துள்ளது. அவர்களோடு கூட்டு சேர்ந்தால் ஊழலை எப்படி ஒழிக்க முடியும். இவர்களை ஒழித்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். தேர்தல் வந்தால்போதும், மக்களை ஆட்டு மந்தைபோல லாரிகளில் ஏற்றி 200 ரூபாய் தரக்கூடிய நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டனர். என் மக்களை நம்பி நாங்கள் தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறோம். தி.மு.க, அ.தி.மு.க வைத்துள்ளது கூட்டணி அல்ல. நோட்டு மற்றும் சீட்டு அணி. இது தமிழ்நாட்டுக்குப் பிடித்த சனி.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவஜோதியை ஆதரித்து சீமான் பிரசாரம்

ஆளும் கட்சிகள் அறிவை வளர்க்கும் கல்வியை அனைவருக்கும் சமமாகத் தந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு பணம் இருப்பவர்களுக்குத்தான் கல்வி கிடைக்கிறது. அரசு மருத்துவமனைகள் ஏன் தரமாக இல்லை என்றால், ஆட்சியாளர்கள் தரமற்று இருப்பதால். தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும்போது ஏன் அரசுப் பேருந்துகள் லாபத்தில் இயங்கவில்லை. நாங்கள் வந்தால் 2 கோடி பேருக்கு வேலை எனக் கூறும் மோடி, ஆட்சியிலிருந்தபோது ஏன் தரவில்லை. உழைக்கும் அடித்தட்டு மக்களைப் பற்றி சிந்திக்காத அரசு, மோடி அரசு.  50 கி.மீட்டருக்கு 50 ரூபாய் கப்பம் கட்டுகிறோம். இந்தியா அடிமையாக இருந்தபோதுகூட அதுபோல கட்டவில்லை.

சீமான் பிரசார கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

இந்தியைத் திணித்தார்கள் எதிர்த்தோம். தற்போது 2 லட்சம்  இந்திக்காரர்கள் தமிழகத்தில் வேலைசெய்கிறார். காசுக்கு வாக்கை விற்கவில்லை. வாழ்க்கையை விற்கிறோம். ஒருமுறை எங்களுக்கு வாக்களித்துப் பாருங்கள் செய்கிறோம். உலகம் முழுவதும் ஒரே கொள்கை உள்ள கட்சி நாம் தமிழர்கட்சி. 2 தொகுதிகளில் நிற்கும் ராகுல் காந்தி வென்ற பிறகு, எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வார். அந்தத் தொகுதி மறுதேர்தலுக்கான செலவு யாருடையது. மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் ஒருவர் தலைவரா. ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்பவரே தலைவர். வாக்குப்பெட்டியில் எது மங்கலாக உள்ள சின்னமோ அதுதான் விவசாயி சின்னம். உங்களால் எங்களது சின்னத்தைத்தான் மறைக்கமுடியும். எங்களை மறைக்கமுடியாது. நீங்கள் நசுக்க நசுக்கத்தான் நாங்கள் வளர்ந்துகொண்டிருக்கிறோம். அதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.