`தமாஷாகப் பேசும்போது ஒருவேளை சொல்லியிருக்கலாம்!’ - தினகரன் சொன்ன குற்றச்சாட்டுக்கு பொன்.ராதா விளக்கம் | Election 2019; pon radhakrishnan slams TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (11/04/2019)

கடைசி தொடர்பு:14:20 (11/04/2019)

`தமாஷாகப் பேசும்போது ஒருவேளை சொல்லியிருக்கலாம்!’ - தினகரன் சொன்ன குற்றச்சாட்டுக்கு பொன்.ராதா விளக்கம்

''தேர்தல் நெருங்கும்போது பரபரப்பை ஏற்படுத்தி, தனது கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறவைக்க வேண்டும் என்று அந்த கட்சித் தலைவர்கள் செயல்படுவது அரசியலில் வாடிக்கை. அ.ம.மு.க கட்சியின் தினகரன் கூறியதையும் அதில் ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன்'' என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தக்கலையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என டி.டி.வி-யிடம் நான் கூறியதாகச் சொல்வது சரியில்லை. தேர்தல் நெருங்கும்போது பரபரப்பை ஏற்படுத்தி, தனது கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று அந்த கட்சித் தலைவர்கள் செயல்படுவது அரசியலில் வாடிக்கை. அ.ம.மு.க-வின் தினகரன் கூறியதையும் அதில் ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன். பா.ஜ.க-வின் கறுப்பு முருகானந்தம் அவரது ஊரைச் சேர்ந்தவர். கறுப்பு முருகானந்தத்திற்கு தினகரனுடன் நல்ல நட்பு உண்டு. பல விஷயங்களுக்கு அவரிடம் போயிருக்கலாம். தேர்தல் விஷயத்தில் தமாஷாகப் பேசும்போது இதுபற்றி பேசியிருக்கலாம். எனக்குத் தெரிந்து. இது ஒருநாள் செய்திக்குப் பயன்படலாம். மற்றபடி, எந்த மாற்றமும் ஏற்படுத்தப்போவது இல்லை. குமரி மாவட்ட அரசியல் பற்றித் தெரியாதவர் தினகரன். என்னிடம் கேட்டால், கன்னியாகுமரி தொகுதியில் பலமான வேட்பாளரைப் போட வேண்டும் எனக் கூறியிருப்பேன். டி.டி.வி-க்கு சில பிரச்னை ஏற்பட்டபோது, அவர் மத்திய அமைச்சர்களைச் சந்தித்ததாகவும், அது நடக்காத விரக்தியால் அப்படிப் பேசியிருக்கலாம் என கறுப்பு முருகானந்தம் கூறியிருப்பதாகச் சொல்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் பல அரசியல் கட்சித் தலைவர்களிடம் நாங்கள் பழகுவோம். சமீபத்தில், அவர் கட்சி தொடங்கிய பிறகு நான் பேசவில்லை. தனிப்பட்ட முறையில் பேசப்பட்டதை வெளியே கொண்டுவருவது அநாகரிகம் என்பதை டி.டி.வி. உணர வேண்டும்.

 

பொன்.ராதாகிருஷ்ணன்


பா.ஜ.க டோக்கன் கொடுப்பதாகவும், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கூறிவருவது வேடிக்கையானது. கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் டோக்கன் கொடுத்தார். நான் கடை வைக்கவில்லை, கடை வைத்திருப்பவர்கள் டோக்கன் கொடுப்பார்கள். நான் மீனவர்கள் கிராமத்தில் வாக்கு சேகரிக்கப்போகும்போது நல்ல வரவேற்பு உள்ளது. நாங்கள் 1998-க்குப் பிறகு அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறோம். வடகிழக்கு மாகாணத்தில் 90 சதவிகிதம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அங்கு, இப்போ பா.ஜ.க ஆட்சி நடக்கிறது" என்றார்.