ஆசைப்பட்ட மாஸ்டர்; சிக்க வைத்த மனைவியின் சகோதரன்! - விசாரணை வளையத்தில் `டிக்டாக்' தோழி  | police arrested man with fake currency

வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (11/04/2019)

கடைசி தொடர்பு:15:24 (11/04/2019)

ஆசைப்பட்ட மாஸ்டர்; சிக்க வைத்த மனைவியின் சகோதரன்! - விசாரணை வளையத்தில் `டிக்டாக்' தோழி 

50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்களுடன் மலையரசனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மலையரசனின் டிக்டாக் தோழி மற்றும் கள்ள நோட்டுக் கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். 

டிக்டாக் தோழியால் சிக்கிய கள்ளநோட்டு

சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜில் அறை எண் 302ல் ஹவாலா கும்பல் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் தூத்துக்குடி, கயத்தாறைச் சேர்ந்த மலையரசன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மலையரசனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

மலையரசனிடம் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பியவர் குறித்த தகவலும் அவரின் டிக்டாக் தோழி குறித்த விவரமும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் அவர்களைப் பிடிக்க திருவல்லிக்ணேி துணைக்கமிஷனர் சுகுணாசிங், எழும்பூர் உதவிக்கமிஷனர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மலையரசனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, பனிக்காரன் குளம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலம், நாசிக், டக்லே நகரில் டிபன் சென்டர் நடத்திவந்துள்ளார் டீ மாஸ்டரான மலையரசன். அப்போது அதே பகுதியில் டெய்லர் கடை வைத்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணுடன் மலையரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பணப்பிரச்னையில் சிக்கித் தவித்தார் மலையரசன். மனைவியின் சகோதரரான கோவையைச் சேர்ந்த கொம்பையாவிடம் கடனாக பணம் கேட்டுள்ளார். அப்போது, கொம்பையா, தன்ராஜ் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் கள்ளநோட்டு கடத்தல் தொழில் வழக்கில் சிக்கியவர்கள். இவர்கள் மீது கடந்த 2018-ம் ஆண்டு கள்ளநோட்டு கடத்தியதாக விருதுநகர், சூளைக்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

டிக்டாக் தோழியால் சிக்கிய மலையரசன்

மலையரசனின் பணத்தேவையைப் பயன்படுத்திய கொம்பையாவும் தன்ராஜிடம் 50 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை சென்னையில் உள்ள ஒருவரிடம் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் நல்ல நோட்டுகளைக் கமிஷனாகத் தருகிறேன் என்று போனில் ஆசைவார்த்தைக் கூறினர். அதற்கு மலையரசனும் சம்மதித்தார். இதையடுத்து மலையரசன் மூலம் தங்களிடமிருக்கும் கள்ள நோட்டுகளை மாற்றலாம் என அவர்கள் ஸ்கெட்ச் போட்டு அதற்காக ரூட்டையும் மலையரசனிடம் கூறியுள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்த மலையரசன், நாசிக்கில் இருந்து கடந்த 13 நாள்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்து தனது பெங்களூரு தோழியைச் சந்தித்துள்ளார். பிறகு அங்கிருந்து பஸ் மூலம் கயத்தாறு வந்துள்ளார்.

7-ம் தேதி கயத்தாறிலிருந்து பஸ் மூலம் கோவை சென்று தன்ராஜிடம் கள்ள நோட்டுகளை வாங்கிக் கொண்டு மீண்டும் பெங்களூரு சென்றுள்ளார் மலையரசன்.  அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கி தோழியை சந்தித்துள்ளார். பின்னர் பஸ் மூலம் சென்னை எழும்பூருக்கு கடந்த 8-ம் தேதி இரவு வந்துள்ளார்.  அங்குள்ள அறை எண் 302ல் அறை எடுத்து தங்கியுள்ளார். அந்த கள்ளநோட்டுகளை அரவிந்த் குமார் என்பவரிடம் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கமிஷன் தருவதாக தன்ராஜ் சொல்லியுள்ளார். கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு காத்திருந்த மலையரசனை நாங்கள் பிடித்துவிட்டோம். மலையசரனுக்கு கள்ளநோட்டை கொடுத்தனுப்பிய கோவை தன்ராஜ், கொம்பையா, சென்னை பிரமுகர் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிடிபட்டால்தான் கள்ளநோட்டு கடத்தல் கும்பலின் முழு நெட்வொர்க்கும் தெரியவரும்" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மலையரசன் சிக்கியதும் அவரின் செல்போனை ஆய்வு செய்தோம். அப்போது அவரின் செல்போன் சிக்னல் பெங்களூரு, நாசிக், கோவை, கயத்தாறு ஆகிய நகரங்களின் செல்போன் டவர்களைக் காட்டியது. அது தொடர்பாக விசாரித்தோம். மலையரசனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டபிறகு சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுவந்துள்ளது எங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மண்ணுளிபாம்பு விற்பனையில் அவர் ஈடுபட்டுள்ளார். இதனால் சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜில் அவர் தங்கியிருந்தபோது மண்ணுளிபாம்பு வேண்டும் என்று போலீஸாரே அவரிடம் போனில் பேசி அவரைப் பிடித்தனர். மலையரசன் மீது வேறு எங்காவது வழக்கு உள்ளதா என்று விசாரித்துவருகிறோம். 

மலையரசனுக்கு திருமணமான பிறகும் பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகிவந்துள்ளார். கள்ள நேட்டை வாங்கிய பிறகும் அந்தப் பெண்ணைச் சந்தித்துள்ளார். இதனால் அந்தப் பெண் மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மலையரசனிடம் அந்தப் பெண் குறித்து விசாரித்தபோது டிக்டாக் செயலி மூலம்தான் அவள் எனக்கு அறிமுகமானார் என்று கூறியுள்ளார். இதனால் மலையரசனின் டிக்டாக் தோழியிடமும் கள்ள நோட்டு தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம். மலையரசனின் மனைவியின் சகோதரர் கொம்பையா, அவரின் நண்பர் தன்ராஜ் ஆகியோரைத் தேடி தனிப்படை போலீஸ் டீம் சென்றுள்ளது. அதன்பிறகுதான் கள்ளநோட்டு கும்பல் குறித்த முழுவிவரம் தெரியவரும்" என்றார். 

 ``மனைவியின் சகோதரனை நம்பினேன். அவர் என்னை சிக்கலில் சிக்க வைத்துவிட்டார். கள்ளநோட்டு கடத்தலுக்கும் என்னுடைய பெங்களூரு தோழிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மேலும், என்னுடைய தோழி விவகாரம் தயவு செய்து வீட்டுக்குத் தெரியவேண்டாம்" என்று மலையரசன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். தற்போது மலையரசனின் குடும்பம் நாசிக்கில் உள்ளது. அவர்களுக்கு மலையரசன் கைதான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.