``என்ன வேணும்னாலும் நடக்கலாம்'' - தினகரன் கட்சி குறித்து நட்சத்திரப் பேச்சாளர் பாத்திமா பாபு | fathima babu speaks about dinakaran party

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (11/04/2019)

கடைசி தொடர்பு:15:50 (11/04/2019)

``என்ன வேணும்னாலும் நடக்கலாம்'' - தினகரன் கட்சி குறித்து நட்சத்திரப் பேச்சாளர் பாத்திமா பாபு

அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர், செய்திவாசிப்பாளர், இயக்குநர், நடிகை என பன்முகம் கொண்டவர் பாத்திமா பாபு. பலமுறை ஜெயலலிதாவிடமிருந்து பாராட்டு பெற்றவர். தற்போது அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

பாத்திமா பாபு

``பிரசாரம் ரொம்ப நல்லா போய்ட்டு இருக்கு. மக்கள் அ.இ.அ.தி.மு.க-வுக்கு முன்னாடி கொடுத்த அதே வரவேற்பை இப்பவும் கொடுக்குறாங்க. நாடாளுமன்றத் தொகுதிங்குறது 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய ஏரியா. அங்கே இருக்கிற ஒவ்வொரு மக்களையும் சந்திச்சு வாக்கு சேகரிக்கிறதுங்கிறது சாதாரண விஷயமில்லை. கட்சி நிர்வாகிகள் வெயில், மழைன்னு எதுவும் பார்க்காமல் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துகொண்டு இருக்காங்க. நான் மாலையில் 6 மணியிலிருந்து 10 மணி வரை பிரசாரத்தில் ஈடுபடுறேன். நாங்க இரட்டை இலையைத் தவிர வேற யாருக்கும் ஓட்டுப் போட மாட்டோம். அம்மா ஆட்சிதான் வேணும்னு மக்கள் சொல்றாங்க. அவங்களுக்குத் தேவையான பல நலத்திட்டங்களைச் செய்து கொடுத்தது இந்த ஆட்சிதான் என்பதை அவங்க உணர்றாங்க. குறிப்பிட்டுச் சொல்லணும்னா பெண்கள் அதிக அளவில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு சப்போர்ட் பண்றாங்க. அம்மாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் இங்க இருக்கேன்'' என்றவரிடம் 'அ.தி.மு.க வெகுவிரைவில் தினகரனுடன் இணைந்துவிடும்' என்று பேசப்படுவதற்கும் பதில் அளித்தார்.

``தினகரனோடது ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு குளம். நாங்க கடல்... கடல் எப்படி குளத்தோட போய் சேரும்? அவங்க வந்து சேர்ந்துகிடுறாங்கனா அது வேற... நம்ம எப்படி போய்ச் சேர முடியும்? அந்த சொல்லாடலே தப்பு. அவங்க வேண்டாம்னுதான் பிரிஞ்சிருக்கோம். வேணும்னா தனியா பிரிய வேண்டிய அவசியமே இல்லியே. எல்லாருமே சேர்ந்து ஒரு இயக்கமா மாறும்னா... அது ஃபியூச்சர்ல பார்த்துக்கலாம். என்ன வேணும்னாலும் நடக்கலாம்'' என்று கூறினார் பாத்திமா பாபு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க