`எதிரணியில் ஒரு எம்.பி கூட இல்ல, எங்களிடம் 37 எம்.பி-க்கள் இருக்கிறாங்க!'- முதல்வர் எடப்பாடி | There are no MPs in the opposite party says edappadi palanisamy during campaign

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (11/04/2019)

கடைசி தொடர்பு:16:20 (11/04/2019)

`எதிரணியில் ஒரு எம்.பி கூட இல்ல, எங்களிடம் 37 எம்.பி-க்கள் இருக்கிறாங்க!'- முதல்வர் எடப்பாடி

``கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க எம்.பி-க்கள் எங்களிடம் இருக்கிறார்கள். எதிரணியில் ஒரு எம்.பி கூட இல்லை" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

                                         முதல்வர் எடப்பாடி பிரசாரம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பொ.சந்திரசேகரை ஆதரித்து அரியலூர் அண்ணா சிலை அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ``கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க எம்.பி-க்கள், 1 பா.ம.க, 1 பா.ஜ.க எம்.பி-க்கள் இருந்த கட்சிகள் ஒன்றாகி கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், எதிரணியில் ஒரு எம்.பி கூட இல்லை.

                                      அ.தி.மு.க வேட்பாளர் பொ.சந்திரசேகரை ஆதரித்து முதல்வர் பிரசாரம்

நாடு பாதுகாப்பாகவும் வளர்ச்சியடையவும் பொருளாதார வளர்ச்சி மேம்படவும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க-வுக்கு மக்கள் வாய்ப்பளித்தபோதெல்லாம் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் தங்களது குடும்ப நலனில் அக்கறை செலுத்தியவர் ஸ்டாலின். கேரளாவில் ராகுலை எதிர்த்து நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுடன் உள்ளது. இதிலிருந்தே தெரிகிறது அவர்களது கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம், கால்நடைப் பூங்கா, உழவர் பூங்கா போன்றவை அமைக்கப்படும். மாவட்டம்தோறும் விவசாயிகளுக்குக் காய்கறி குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். இதில், விவசாயிகள் வாடகை இன்றி சேமித்து வைத்துப் பயன்பெறலாம். தமிழகத்தில் 3,000 ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் உபரிநீரைத் தடுக்கும் விதமாக நீரோடைகளில் தடுப்பணைகள் கட்டப்படும். கிராமப்புற மக்களுக்கு பசுமை வீடுகள், நகர்ப்புற ஏழை மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

 அரியலூரில் முதல்வர் எடப்பாடி பிரசாரம்

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலங்கள், செவிலியர் கல்லூரி, சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன" என்று கூறினார். பிரசாரத்தின்போது, அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்படப் பலரும் உடனிருந்தனர்.