`கப்பல் ஏறி போயாச்சு' பாடலுக்காக செஞ்சி வந்தேன், இன்னும் அப்படியேத்தான் இருக்கு!'- பிரசாரத்தில் கமல் வேதனை | kamal hassan slams tamilnadu government

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (11/04/2019)

கடைசி தொடர்பு:16:28 (11/04/2019)

`கப்பல் ஏறி போயாச்சு' பாடலுக்காக செஞ்சி வந்தேன், இன்னும் அப்படியேத்தான் இருக்கு!'- பிரசாரத்தில் கமல் வேதனை

``நாங்கள் போகும் ஊர்களில் மற்ற கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களோ சலுகைகளோ, மக்கள் நீதி மய்யத்துக்குக் கொடுக்க காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் மறுக்கின்றனர். மக்கள் நீதி மய்யத்தை ஊருக்கு வெளியே நிறுத்தி வைக்கிறார்கள். ஒரு வயதுக் குழந்தையான எங்களைப் பார்த்து, இந்த அரசு பயப்படுகிறது. அதனால்தான் எங்களை முடக்க நினைக்கிறது'' என்று கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் தமிழக அரசைச் சாடினார்.

செஞ்சியில் கமல்ஹாசன் பிரசாரம்

ஆரணி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிகளின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஷாஜி மற்றும் அருள் ஆகியோரை ஆதரித்து ஆரணி, செங்கம், திருவண்ணாமலை, செஞ்சி ஆகிய இடங்களில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆரணி மற்றும் செங்கம் பகுதியில் நகருக்குள் பேச கமல்ஹாசனுக்குத் தடைவிதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மற்றும் செஞ்சி ஆகிய ஊர்களில் மட்டுமே நகருக்குள் பேச அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பேசிய அவர், ``ஆரணி, செங்கம் பகுதியில் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். பேசுங்கள் பேசுங்கள் என்று கத்தினார்கள் எம்மக்கள். ஆனால், அவர்கள் மத்தியில் பேசமுடியாமல் போனது பெரும் வருத்தம் எனக்கு. காரணம், நகருக்குள் பேசுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பதுதான். இருந்தாலும் மக்களின் அன்பு எங்கள் மீது இருப்பதால் அவர்களும் நானும் கண்ணாலேயே பேசிக்கொண்டோம். சைகையாலேயே வாக்கு சேகரித்தேன். அவர்களும் புரிந்துகொண்டு  வாக்களிப்பதாகச் சைகையாலேயே உறுதி அளித்தார்கள்.

கமல்

இந்த நாட்டைப் பார்த்துக்கொள்ள மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று கடந்த 30 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போதுதான் புரிகிறது. காரணம், தமிழக மக்கள் மீது அக்கறையில்லாத கேவலமான முறையில் தமிழக அரசியல் வளர்ந்து வருவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் எங்கே சென்றாலும், ஒரு நல்ல அரசு செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மக்களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, தண்ணீர் ஆகியவற்றைத் தனியாரிடம் கொடுத்துவிட்டு டாஸ்மாக் கடையை அரசு நடத்துகிறது என்றால் இந்த நாட்டுக்குக் கிடைத்த பெரிய அவமானம் வேறு எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன். உடல், மொழி, அடிமைத் தனத்தில் அ.தி.மு.க அரசு மத்தியில் அடங்கிக் கிடக்கிறது. அந்த அடிமைத் தனத்தை நமக்குள்ளும் புகுத்தப் பார்க்கிறார்கள். அது புகாது. இந்த அரசை மாற்றும் நேரம் வந்துவிட்டது. அதற்காக அமைதியான முறையில் ஒரு போராட்டமும் நடந்துகொண்டு வருகிறது.

கஜா புயல் மற்றும் ஒகி புயலால் தமிழகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. அப்போது, நிவாரண நிதியை முழுமையாகக் கொடுக்காத பிரதமர் மோடி, தமிழகம் வராத மோடி இப்போது, நான்கு முறை தமிழகம் வந்துவிட்டார். ‘கோபேக் மோடி கோபேக் மோடி' என்று எதிர்த்தும் கம்பேக் கம்பேக் தமிழகம் என்று அவர் வருகிறார்.’ மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமக்குக் கவலையில்லை. ஆனால், தமிழகத்துக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதே என் கேள்வி. தமிழகத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

கமல்ஹாசன் பிரசாரம்

`இந்தியன்' படத்தில் வரும் `கப்பல் ஏறிப் போயாச்சு' பாடலுக்காக  செஞ்சி வந்தேன். அப்போது இருந்த செஞ்சிக்கும் இப்போது இருக்கும் செஞ்சிக்கும் எந்த மாற்றமும் இல்லை. அப்படியேதான் இருக்கிறது. வளரவே இல்லை. முன்பு ஆண்ட அரசும், இப்போது ஆளும் அரசும் இந்த செஞ்சியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவில்லை. இந்த நிலை செஞ்சிக்கு மட்டும் அல்ல; தமிழகம் முழுக்கவே இதே நிலைதான் என்பதே என் வருத்தம். தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கான மாற்றம் தான் இந்தத் தேர்தல். நாளை நமதே" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க