`அதனால்தான் அவரை கஜா 2 என கூப்பிடுறேன்!'- யாரை சொல்கிறார் டி.டி.வி.தினகரன் | ttv dinakaran slams stalin and communist party

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (11/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (11/04/2019)

`அதனால்தான் அவரை கஜா 2 என கூப்பிடுறேன்!'- யாரை சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

``கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளாக மாறிவிட்டன'' என அ.ம.மு.க துணைப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

தினகரன்

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் செங்கொடி மற்றும் எஸ்.காமராஜ் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய தினகரன், ``ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டக் கூடாது எனச் சொன்ன பா.ம.க-வுடன் தற்போது அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. இது மெகா கூட்டணியல்ல மானங்கெட்ட கூட்டணி.   

அதுமட்டுமல்ல தற்போது மோடியுடன் கூட்டணி வைத்துள்ளது அ.தி.மு.க. கஜா புயல் தாக்கியபோது மோடி வந்தாரா வரவில்லை. தூத்துக்குடியில் மக்களை நாய்களைப் போல் சுட்டபோது தமிழகத்துக்கு மோடி வந்தாரா, வரவும் இல்லை. பஞ்சம், வறட்சி, புயல் என எவ்வளவோ பிரச்னைகள் வந்தபோதும் இங்கு மோடி வரவில்லை. ஆனால், தற்போது டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தேர்தலுக்காக மன்னார்குடியிலிருந்து திருவாரூர் வருவதுபோல வந்துட்டு போறார். இங்குள்ள தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் ஏமாளிகளா?

பிரசாரம்

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அ.ம.மு.க பக்கம்தான் உள்ளார்கள். தோற்கப்போகிறோம் எனத் தெரிந்தே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தை திருவாரூர் இடைத்தேர்தலில் அமைச்சர் காமராஜ் நிறுத்தியிருக்கிறார். இங்கு யாருக்கு ஜீவானந்தத்தைத் தெரியும் எப்படி வாக்களிப்பார்கள். இன்னொரு கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி என்று சொல்கிறது. நாங்கள் என்ன மதவாதக் கூட்டணியா, மதத்தையும் சாதியையும் பற்றி அரசியல்வாதிகள் பேச வேண்டியதில்லை. பேச வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்கிறது.

எங்கள் குடும்பத்தினர் கோயிலுக்குச் செல்வார்கள் என ஸ்டாலின் சொல்கிறார். இதை ஏதோ சந்திர மண்டலத்துக்குச் சென்று வந்ததுபோல் பெருமைப்படுகிறார் ஸ்டாலின். கஜா புயல் பாதிப்பைப் பார்க்க ஹெலிகாப்டரில் வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஹெலிகாப்டரில் இருந்தவாறே பார்த்துவிட்டு சென்றுவிட்டார். ஏன் ஓட்டு கேட்கவும் ஹெலிகாப்டரில் வரவேண்டியதுதானே. கஜா புயல் 140 கி.மீ வீசியது  ஸ்டாலின் 150 கி.மீ வேகத்தில் வந்துட்டு போயிட்டார்  அதனால்தான் அவரை கஜா 2 என கூப்பிடுறேன். அப்படி கூப்பிட்டா ஸ்டாலின் கோபப்படுகிறார்.

தினகரன்

கஜா புயலால் இடைத்தேர்தல் ஒருமுறை தள்ளிப்போனது. தள்ளி வைப்பதற்கு தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சியை வைத்து வழக்கு போட்டது. இப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளாக மாறிவிட்டன.  இதற்குக் காரணம் ஸ்டாலின்" என விமர்சித்தார்.