`மை'யைக் காண்பித்தால் ரூ.50 தள்ளுபடி!- சிக்கன் கடை ஓனரின் தேர்தல் விழிப்புணர்வு  | 50 rs Discount for chicken who shows vote ink

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (11/04/2019)

கடைசி தொடர்பு:17:37 (11/04/2019)

`மை'யைக் காண்பித்தால் ரூ.50 தள்ளுபடி!- சிக்கன் கடை ஓனரின் தேர்தல் விழிப்புணர்வு 

தேர்தல் விழிப்புணர்வு

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நேரத்தில் சென்னையைச் சேர்ந்த சிக்கன் கடை உரிமையாளர், வாக்களித்துவிட்டு அடையாள மையோடு சிக்கன் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ வாங்கினால் 50 ரூபாய் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தலும் நடக்கிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. வாக்குசேகரிப்பில் வேட்பாளர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பேனர்களையும் ஆங்காங்கே வைத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள சிக்கன் மற்றும் மட்டன் சென்டரின் முன், ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், `வாக்களிப்பது உங்கள் உரிமை, அது நமது ஜனநாயகக் கடமை. நீங்கள் அளிக்கப்போகும் ஒவ்வொரு வாக்கும் வலிமையான பாரதத்தை உருவாக்கப் போகும் சக்தியாகும். தவறாமல் வாக்களிப்பீர், ஜனநாயகத்தை காப்பீர் 18.4.2019 அன்று வாக்களித்தற்கான அடையாள மையை காண்பித்தால் ஒரு கிலோ சிக்கனுக்கு 50 ரூபாய் தள்ளுபடி. இச்சலுகை 18.4.2019 அன்று மட்டும்தான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இந்த பேனர் குறித்து கடையின் உரிமையாளர் பாபுவிடம் கேட்டதற்கு, ``நான்  எம்.ஏ. வரலாறு படித்துவிட்டு அரசு வேலைக்காக  தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாபு காத்திருக்கவில்லை. இந்தக் கடையை சின்னதாக தொடங்கினேன். இன்று 15 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துவருகிறேன். கடையைத் தொடங்கி 30 ஆண்டுகளாகிவிட்டது. இந்தச் சமுதாயத்துக்கு முடிந்த உதவிகளையும் தேவையான விழிப்புணர்வையும் அளிப்பது ஒவ்வொருவரின் கடமை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் தேர்தலின்போது அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதற்கு நம்மால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் தேர்தலில் வாக்களித்து விட்டு வருபவர்கள், அடையாள மையைக் காண்பித்தால் அவர்களுக்கு தள்ளுபடியில் சிக்கன் வழங்கலாம் என்ற  ஐடியா மனதில் தோன்றியது.  2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐடியாவை அமல்படுத்தினேன்.

 தேர்தலில்  வாக்களித்துவிட்டு சிக்கன் வாங்க வந்த வாடிக்கையாளர்கள்,  அடையாள மையை காண்பித்தால் ஒரு கிலோ சிக்கனுக்கு 20 ரூபாய் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அடுத்து 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் ஒரு கிலோ சிக்கனுக்கு 20 ரூபாய் தள்ளுபடி கொடுத்தேன்.  அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு செய்துவருகிறது. சிக்கனுக்கு தள்ளுபடி கொடுத்து என்னால் முடிந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன். என்னுடைய கடையில் வேலை பார்ப்பவர்களையும் கட்டாயம் வாக்களிக்க வலியுறுத்துவேன். மூன்றாவது முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கிலோ சிக்கனுக்கு 50 ரூபாய் தள்ளுபடி என்று அறிவித்துள்ளேன். இதனால் எனக்கு நஷ்டம் ஏற்படும். அதை நான் சமாளித்துக் கொள்வேன். 

தமிழக அரசு பிளாஸ்டிக் கவர்களைத் தடை செய்தபோது சிக்கன், மட்டனை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பாத்திரங்கள் கொண்டுவந்தால் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் தள்ளுபடி என்று அறிவித்தேன். இதனால் பாத்திரங்களைக் கொண்டு வந்து சிக்கன், மட்டன் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர்" என்றார்.