`அக்கா உங்கள மறுபடியும் ஏமாத்திட்டாங்க; அது தாமரை இல்லை, வெங்காயமாம்!'- தமிழிசையை கலாய்த்த நெட்டீசன்கள் | Election fun in tamilisai campaign at tuticorin

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (11/04/2019)

கடைசி தொடர்பு:18:20 (11/04/2019)

`அக்கா உங்கள மறுபடியும் ஏமாத்திட்டாங்க; அது தாமரை இல்லை, வெங்காயமாம்!'- தமிழிசையை கலாய்த்த நெட்டீசன்கள்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனின் பிரசாரத்தில் பல்லாரி வெங்காயத்தில் தாமரையை மலரச் செய்து தமிழிசையை வரவேற்றனர். இதுகுறித்து கமென்ட்ஸ்களும் பறக்கின்றன.

தமிழிசை பிரசாரம்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் பா.ஜ.க. சார்பில் தமிழிசை செளந்தரராஜனும் போட்டியிடுகின்றனர். இரண்டு பெண் வி.ஐ.பி-க்கள் மோதுவதால் தூத்துக்குடி தொகுதியில் இருவரில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது. தமிழிசையை ஆதரித்து பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா சில நாள்களுக்கு முன்பு பிரசாரம் செய்தார். அந்தப் பிரசார பொதுக்கூட்ட மேடையிலேயே ``தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும், மலர்ந்தே தீரும்” என உரத்த குரலில் பேசினார். அமித் ஷாவின் வருகைக்குப் பிறகு தமிழிசையின் பிரசாரமும் வேகம் எடுத்துள்ளது. 

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் தமிழிசை. பிரசாரத்தின்போது, மலர் மாலைகள் அணிவிப்பது, ஆரத்தி எடுப்பது, பொட்டு வைப்பது, சந்தனம் பூசுவது, பூக்கள் தூவுவது ஆகியவற்றால் தூத்துக்குடியில்  தாமரை மலர்ந்துவிடும் என்ற அதீத நம்பிக்கையுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் தமிழிசை. அதேபோல, இன்று எப்போதும்வென்றான் அருகில் உள்ள போடுபட்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்றார். இந்தப்பகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது என்பதால், அவருடன் அத்தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பனும் உடன் சென்றிருந்தார். 

வெங்காயத்தில் மலர்ந்த தாமரை

தமிழிசை மற்றும் சின்னப்பனை வரவேற்கும் விதமாக ஆரத்தித் தட்டுகளை ஏந்திய பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அதில், ஒரு பெண்ணின் ஆரத்தித் தட்டில் இருந்த தாமரைப் பூவைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பல்லாரி வெங்காயத்தில் தாமரைப் பூவைப் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒன்றா, இரண்டா.., அந்த தட்டில் நான்கு வெங்காயத் தாமரைகள் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இரட்டை இலைச் சின்னத்தில் உள்ள இலையைக் குறிக்கும் வகையில், அரசமர இலை வைக்கப்பட்டு அதில் குப்பி மெழுகுவத்தி பொருத்தப்பட்டு ஆரத்தி எடுக்கப்பட்டது. 

 

தமிழிசை ட்வீட்

வெங்காயத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த தாமரை என்றாலும், தாமரைப்பூ ஆரத்தியை ஏற்றுக்கொண்டு சந்தோஷமடைந்தார் தமிழிசை. அந்த தாமரைப்பூ தமிழிசையை ஈர்த்ததன் அடையாளமாக அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் அப்லோடு செய்து, ``தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட போடுபட்டி கிராமத்தில் இரட்டை இலையில் தாமரையை மலர வைத்து வரவேற்பளித்த சகோதரிகளுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.       

அவரது பதிவுக்குக் கீழே, ``தாமரை மலராது வெங்காயம்தான் மலரும்னு சொல்றாங்க. அக்கா உங்கள மறுபடியும் ஏமாத்திட்டாங்க. அது தாமரை இல்லை, வெங்காயமாம், ஆகாயத் தாமரை கேள்விப்பட்டிருக்கோம், ஆனா வெங்காயத்தில் உருவான தாமரையை  இப்போதான் பார்க்கிறோம். உங்களப் பார்த்தா பாவமா இருக்கு அக்கா” என கமென்ட்ஸ்களும் பறந்த வண்ணம் உள்ளன.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க