`2000 மீட்டர் உயரத்தில் வாழக்கூடியது!'- அழிந்துவரும் அரிய வகைத் தவளைகள் | Raorcheststes signatus frog nilgiris

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (11/04/2019)

கடைசி தொடர்பு:18:40 (11/04/2019)

`2000 மீட்டர் உயரத்தில் வாழக்கூடியது!'- அழிந்துவரும் அரிய வகைத் தவளைகள்

ராவோர் செஸ்டஸ் சிக்நேட்டஸ் தவளை

உலக அளவில் நீலகிரி உயிர் சூழல் மண்டலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வருகிறது. காலநிலை மாற்றம், வனங்கள் அழிப்பு, ரசாயன உரம் மற்றும் மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் பல உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஓரிட வாழ்விகள் உயிர் பிழைக்க கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. அழிவின் விளிம்பில் உள்ள பல உயிரினங்களில் தவளைகள்கூட தப்பவில்லை.

தவளை

பரிணாம வளர்ச்சியில் உலகில் தோன்றிய முதுகெலும்பு உள்ள விலங்கு இனங்களுள் தவளையும் ஒன்றென அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதில் புஷ் பிராக் எனப்படும் புதர் தவளைகள் அழிவின் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. ஊர்வன மற்றும் தவளைகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் ஊட்டி அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் பெ.கண்ணன் கூறுகையில்,``சூழலியலுக்குத் தவளைகளின் பங்கு மிக முக்கியமானது. ஒரு பகுதியில் தவளைகள் அதிகம் காணப்பட்டால் அந்தப் பகுதி வன வளத்தின் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் தவளை இனங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக நீலகிரி விலங்கியல் துறை பேராசிரியர் பெ.கண்ணன்உயிர்க்கோள மண்டலத்தின் காலநிலை, தாவர வகை மழையின் அளவு போன்றவற்றைப் பொறுத்தே இவற்றின் வாழ்வியல் அமைகிறது. குறிப்பாக உணவுச் சங்கிலியில் தவளைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ராவோர் செஸ்டஸ் சிக்நேட்டஸ் (Raorchestes signatus) தவளைகள் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரித்தானதாகும். உலகில் வேறெங்கும் இவற்றைக் காணமுடியாது. நீலகிரியில் 8 வகை தவளை இனங்கள்  புதர்களில் காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் வாழக்கூடியது. கிராஸ் பேக்ட் புஷ் தவளைகள் அழிந்துவரும் நிலையில் உள்ள இனம். இவற்றில் தலைப்பிரட்டை கிடையாது. முட்டையிட்டு நேரடியாகக் குஞ்சு பொரிக்கும். இந்த வகை தவளைகள் தண்ணீரைச் சார்ந்து வாழ்வது கிடையாது என்பதால் உலகில் நீர் இன்றி மற்ற உயிர்கள் அழிந்தாலும் இவை வாழும். ஆனால், கடந்த ஆண்டுகளில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றின் எண்ணிக்கையைப் பாதித்துள்ளது. மேலும், வனப்பகுதிகளில் அதிகரித்துவரும் வாகனப் போக்குவரத்துகளால் நிறைய தவளைகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கிறது. மேலும், விளைநிலங்களில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் இவற்றைக் கடுமையாகப் பாதிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், நடுவட்டம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது. இவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்” என்றார்.