`எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்!' - பதறும் சிவகங்கை சுயேச்சை வேட்பாளர் | sivagangai independent candidate need police protection

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (11/04/2019)

கடைசி தொடர்பு:19:25 (11/04/2019)

`எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்!' - பதறும் சிவகங்கை சுயேச்சை வேட்பாளர்

``செயற்கை மழைபொழிய வைக்கக் கூடிய விஞ்ஞான ரீதியான திட்டம் என்னிடம் இருக்கிறது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய் தெப்பக்குளங்கள் அனைத்திலும் தண்ணீரை நிரப்ப முடியும். செயற்கைக்கோள் மூலமாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே மாலை நேரங்களில் தங்களுடைய படிப்புகளைப் படிக்க வீடுதோறும் மடிக்கணினி வழங்க இருக்கிறேன். ஒவ்வொரு தாலுகாவிலும் இலவச சட்ட உதவி மையம் அமைத்து அங்கே இரண்டு பெண் வழக்கறிஞர்கள் இரண்டு ஆண் வழக்கறிஞர்கள் உதவியோடு ரேசன் கார்டு  பட்டா வாங்கிக் கொடுப்பது. வழக்குகள் இலவசமாக நடத்திக்கொடுப்பது" எனத் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து வித்தியாசமான முறையில் களம் இறங்கியிருக்கிறார் அப்துல்கலாமின் தீவிர பக்தரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரவணன். 

வழக்கறிஞர் சரவணன்


அவர் பேசும்போது, ``நான் சிறுவயதிலிருந்தே சமூக சேவையில் ஆர்வம் கொண்டவன். டாக்டர் அப்துல்கலாம் மீது தீவிர பற்று கொண்டவன். லஞ்சம் ஊழல் இல்லாத மாவட்டத்தை முதலில் உருவாக்க வேண்டும். நான் சார்ந்திருக்கும் யாதவ சமூக மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலையான தலைவர்கள் இல்லை. இந்த சமூக மக்களைக் குறிப்பிட்ட சிலர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிடமும் தங்களுடைய சுயநலத்துக்காக அடகுவைத்து விடுகிறார்கள். அவர்களை இந்த மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

நான் வெற்றி பெறுவேன் என்று சொல்லவில்லை. தோல்வி அடைந்தாலும் சந்தோசப்படுவேன். என்னுடைய நோக்கமே ஊழலற்ற மாநிலத்தை உருவாக்க வேண்டும். அதற்காகச் சென்னையில் சகாயம் ஐ.ஏ.எஸ், நடிகர் விஜய் போன்றவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறேன். அப்துல்கலாம் கண்ட கனவு நனவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். இந்த நிலையில், என்னுடைய பவர் ஏஜென்ட் சதீஸ் என்பவர், கடந்த வாரம் சிவகங்கையிலிருந்து காளையார்கோவில் செல்லும்போது பைக்கில் வந்த இரண்டு பேர் கொல்லங்குடி அருகே அவரை மிரட்டியிருக்கிறார்கள்.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான ஜெயகாந்தனிடம் புகார் கொடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறோம். ராஜகண்ணப்பன் மீது அதிருப்தியில் இருக்கும் யாதவர்கள் கட்சி பேதம் இன்றி எனக்குத் தேர்தல் வேலை செய்துவருகிறார்கள். எனக்குத் தொப்பி சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ சிலர் இதுபோன்ற மிரட்டல் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்'' என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க