`என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!' - பிரசாரத்தில் உடைந்து அழுத அன்புமணி | anbumani Cried dharmapuri election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (11/04/2019)

கடைசி தொடர்பு:19:15 (11/04/2019)

`என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!' - பிரசாரத்தில் உடைந்து அழுத அன்புமணி

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு பிரசாரம் செய்து வருகிறார். ஏப்ரல் 10-ம் தேதி இரவு கடகத்தூர் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்குகளைச் சேகரித்தபோது அன்புமணி ராமதாஸ் தன்னையும் மறந்து கண்ணீர் வடித்த சம்பவம் தர்மபுரி தொகுதி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அன்புமணி வரவேற்பு

இது குறித்து கடகத்தூரைச் சேர்ந்த ஜெம்பேரி என்பவர் நம்மிடம் தெரிவித்ததாவது., ``நேற்று இரவு கடகத்தூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக அன்புமணி வருவதாகத் தகவல் கிடைத்தது. அவரை வரவேற்கக் கிராம மக்கள் பலரும் திரண்டு வந்து காத்திருந்தோம். ஊர் எல்லையில் சிறுவர்கள் பலர் அவரின் வாகனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அன்புமணியின் பிரசார வாகனம் ஊர் எல்லையில் வந்தவுடன் சின்னய்யா சின்னய்யா என்று சிறுவர்கள் பின்னால் ஓடி வந்துள்ளனர். இதைக் கண்ட அன்புமணி வாகனத்தை நிறுத்தி சிறுவர்களிடம் நெகிழ்ச்சியாகப் பேசிவிட்டு, தன் மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வாகனத்துக்குப் பின்னால் ஓடி வருவது பாதுகாப்புக் குறைவு என்பதை எடுத்துக் கூறினார். அங்கிருந்து பொதுமக்கள் கூடியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தபோது, அவருக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகளவில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேச நினைத்த அன்புமணி தன்னையும் அறியாமல் கூட்டத்தின் நடுவே உடைந்து அழுதுவிட்டார்'' என்றார்.

கடகத்தூர் ஜெம்பேரி

``தழுதழுத்த குரலில் என்னைச் சிறப்பாக வரவேற்றீர்கள், என் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ள உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று அழுதுகொண்டே பேசினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கூடியிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்துவிட்டது. அவர் அழுவதைப் பார்த்த மக்கள், சின்னய்யா, சின்னய்யா என்று கோசமிட்டனர். அன்புமணி பேசும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.