“சாதிக் பாட்சா மரணத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும்!" - ஜனாதிபதிக்கு சாதிக் பாட்சா மனைவி மனு | reinvestigate sathik batsha murder case; reha banu asks president of india

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (11/04/2019)

கடைசி தொடர்பு:21:00 (11/04/2019)

“சாதிக் பாட்சா மரணத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும்!" - ஜனாதிபதிக்கு சாதிக் பாட்சா மனைவி மனு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்சா, 2011 மார்ச் 16-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக சி.பி.ஐ வழக்கை மூடினாலும், இன்று வரையில் சாதிக்கின் மரணம் மர்மமாகவே இருந்து வருகிறது. சாதிக் மர்ம மரணத்தைத் தீர விசாரிக்க வேண்டுமென அவரின் குடும்பத்தினரும் பல ஆண்டுகளாகக் கோரி வந்தனர்.

சாதிக் பாட்ஷா மனைவி மனு

இந்நிலையில், கடந்த மார்ச் 19-ம் தேதி சாதிக்கின் மனைவி ரேஹா பானு பயணம் செய்த கார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு மனு அளித்துள்ள ரேகா பானு, தன் கணவரின் மர்ம மரணத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ரேஹா பானு

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு ரேகா பானு அளித்துள்ள மனுவில், “என் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சென்னை மாநகர் காவல் ஆணையரிடம் மார்ச் 20-ம் தேதி புகாரளித்துள்ளேன். உள்துறைச் செயலாளரிடமும் இவ்விவரத்தைக் கூறி காவல்துறை பாதுகாப்பு கோரினேன். என் மீது தாக்குதல் நடத்தியவர்கள்தாம், என் கணவரின் இறப்புக்கும் காரணமாக இருக்க வேண்டும். என் கணவரின் மர்ம மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க வேண்டும். என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துத் தீர விசாரித்தாலே, இதன் பின்புலத்தில் உள்ள அரசியல் சக்திகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

2ஜி வழக்கு விசாரணையின்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு என் கணவர் சில தகவல்களைக் கூறினார். அதை அடிப்படையாக வைத்து விசாரணையை மேற்கொண்டால், என் கணவரின் இறப்புக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க உதவுவீர்கள் என நம்புகிறேன்’’ என்று கோரியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், சாதிக் பாட்சா மர்ம மரணத்தில் தி.மு.க தலைவர்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென, சாதிக்கின் மனைவி ஜனாதிபதிக்கு மனு அளித்திருப்பது அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.