`இரட்டை நாடகம் ஆடும் கட்சிகளுக்குத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!' - ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் | people won't vote politicians who support sterlite says sterlite opposition team

வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (11/04/2019)

கடைசி தொடர்பு:21:24 (11/04/2019)

`இரட்டை நாடகம் ஆடும் கட்சிகளுக்குத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!' - ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்

``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்பட்ட கட்சிகளுக்கு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்கபாடம் புகட்டுவர்கள்” எனத் தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி, தூத்துக்குடியின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றபோது, ஏற்பட்ட கலவரத்தில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இத்துயரச் சம்பவம் நடந்து அடுத்த மாதத்துடன் (மே-22) ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில், மே-22ம் தேதி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெளன ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்திட அனுமதி கேட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு என்பது ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது தனி நபரையோ, ஒரு அரசியல் கட்சியையோ சார்ந்த இயக்கம் அல்ல. சாதி, மத பேதங்களைக் கடந்த கூட்டமைப்பு.

தூத்துக்குடியில் கடந்த மே-22ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் போலீஸாரின் தடியடியால் 13 அப்பாவிகள் உயிர் நீத்தனர். அந்தக் கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மௌன ஊர்வலம் நடத்திட அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஸ்டெர்லைட் ஆலைக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இன்றுவரையிலும் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் உரிய அரசு வேலை வழங்கப்படவில்லை.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாகத் தேர்தல் பிரசாரத்தையும் முன்னெடுப்பதாக தீர்மானித்துள்ளோம். இந்தத் தேர்தலிலே இரட்டை நாடகம் ஆடக்கூடிய கட்சிகளையும் தோலுரிப்போம். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்பட்ட எந்தக் கட்சிகளுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் ஆதரவு கிடைக்காது. ஸ்டெர்லைட் ஆலையின் கடைசி செங்கல் அகற்றும் வரை மக்கள் போராட்டம் ஓயாது. அதுபோல, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்பட்ட கட்சிகளுக்குத் தக்க பாடத்தைப் புகட்டுவார்கள். ”என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க