துரைமுருகன் தரப்பில் பணம் சிக்கிய விவகாரம்! - வங்கி மேலாளரிடம் துருவித் துருவி விசாரணை | Money affair - Investigation to the bank manager

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (12/04/2019)

கடைசி தொடர்பு:07:30 (12/04/2019)

துரைமுருகன் தரப்பில் பணம் சிக்கிய விவகாரம்! - வங்கி மேலாளரிடம் துருவித் துருவி விசாரணை

காட்பாடியில் துரைமுருகன் உதவியாளரிடம் மூட்டை மூட்டையாகப் பணம் சிக்கிய விவகாரத்தில், முறைகேடாக பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருக்கலாம் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில், வங்கி மேலாளரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர்.

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த வாரம் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் துரைமுருகன் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம், அவரின் உதவியாளரான பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனிலிருந்து மூட்டை மூட்டையாக ரூ.10 கோடியே 57 லட்சம் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக வேட்பாளர் கதிர்ஆனந்த் உட்பட 3 பேர் மீது காட்பாடி போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துரைமுருகன் உதவியாளரிடம் பிடிபட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணத்தில் கனரா வங்கியின் சீரியல் எண் இருந்தது. வேலூரில் உள்ள அந்த வங்கியின் கிளையில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் கணக்கு வைத்திருக்கிறார். அதிலிருந்துதான் இவ்வளவு பெரிய தொகை கைமாறியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. 

வங்கி மேலாளரின் வீடு

வங்கியிலிருந்து பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாக, கனரா வங்கி மேலாளர் தயாநிதியை விசாரணை வளையத்துக்குள் வருமானவரித் துறை கொண்டுவந்திருக்கிறது. காட்பாடி காந்தி நகரில் உள்ள வங்கி மேலாளரின் வீடு மற்றும் அருகில் உள்ள வங்கி பணம் வைப்பு அறையில் 11-ம் தேதி காலை முதல் இரவு வரை வருமானவரி உதவி ஆணையர் விஜய் தீபன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். துரைமுருகன் மகன் வைப்பு கணக்கிலிருந்து முறைகேடாக மிகப்பெரியத் தொகை எடுக்கப்பட்டதற்கான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. வங்கி மேலாளர் தயாநிதியிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடியாக துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். வருமானவரித் துறை பிடி இறுகியிருப்பதால் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர்ஆனந்த் கலக்கத்தில் இருக்கிறார்கள்.