`பதில் சொல்லுங்கள் தம்பிதுரை!' - காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் ஹேஷ்டேக் பிரசாரம் | Congress candidate Jothimani's creates hashtag against thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (12/04/2019)

கடைசி தொடர்பு:07:22 (12/04/2019)

`பதில் சொல்லுங்கள் தம்பிதுரை!' - காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் ஹேஷ்டேக் பிரசாரம்

கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரைக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சமூகவலைதளங்களில், `பதில் சொல்லுங்கள் தம்பிதுரை' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளார். இந்த ஹேஷ்டேக்கின் கீழ் தினமும் ஒரு கேள்வியை முன்வைத்து வருவதோடு, தொகுதி மக்களையும் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தம்பிதுரைக்கு எதிராக கேள்விகள் கேட்கும்படி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

ஜோதிமணி

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, தமிழகம் முழுக்க பிரசார களம் அனல் பறந்து வருகிறது. அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக தம்பிதுரையே மறுபடியும் போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில், கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்தக் கட்சியின் ஜோதிமணி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இருவரும் தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் குதித்திருக்கிறார்கள். தம்பிதுரை கடந்த பத்து வருடங்களாக தொடர்ச்சியாக கரூர் தொகுதியின் எம்.பியாக இருக்கிறார். இந்தமுறை அவர் வென்றால், அவருக்கு `ஹாட்ரிக் வெற்றி' கிடைக்கும். ஆனால், ``பத்து வருடங்களாக எம்.பியாக இருந்து, தொகுதிக்கு என்ன செய்தீர்கள். நாங்க குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்காமல் அல்லாடுகிறோம்" என்று தொகுதி முழுக்க பரவலாக மக்கள் தம்பிதுரைக்கு எதிராக கேள்வி கேட்கிறார்கள். பல கிராமங்களில் அவரை ஊருக்குள் நுழையவிடாமல், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்தச் சூழலில், தம்பிதுரைக்கு எதிரான மக்களின் கேள்வி கேட்கும் மனநிலையை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தனக்குச் சாதகமாக பயன்படுத்தி பிரசாரம் செய்து வருகிறார்.

ஜோதிமணி

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிமணிக்கு, அவரது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஏராளமானோர் ஃபாலோயர்களாக இருக்கிறார்கள். அதனால், #BathilSollungalThambidurai, #AnswerPlsThambidurai என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, தினமும் தம்பிதுரைக்கு எதிராக ஒரு கேள்வியை முன்வைக்கிறார். `கடந்த பத்தாண்டுகளில் கரூர் தொகுதிக்கு எத்தனை முறை வந்துள்ளீர்கள்?' என்று முதல் கேள்வியை முன்வைத்தார். இந்த நிலையில், இப்போது அடுத்த கேள்வியாக, 'நாடாளுமன்றத்தில் கரூர் தொகுதி பற்றி நீங்கள் பேசியது எத்தனை முறை?' என்று முன்வைத்துள்ளார். அதோடு, ``தொகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் யார் வேண்டுமானால், இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, தம்பிதுரையிடம் கேள்விகளை முன்வைக்கலாம். அவர் பதில் சொல்றாரான்னு பார்ப்போம்" என்று அழைப்பும் விடுத்துள்ளார். 

ஹேஷ்டேக்

சமூகவலைதளத்தில் இப்படி ஹேஷ்டேக் மூலம் ஜோதிமணி தம்பிதுரையிடம் கேள்விகள் கேட்கும் பாணி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது