வாக்குப்பதிவு இயந்திரத்தில் தமிழ், மலையாளத்தில் வேட்பாளர் பெயர்! | candidate names are installed in tamil and malayalam

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (12/04/2019)

கடைசி தொடர்பு:08:20 (12/04/2019)

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தமிழ், மலையாளத்தில் வேட்பாளர் பெயர்!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரம்


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன்சமாஜ் பார்ட்டி, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு நோட்டாவுடன் சேர்த்து மொத்தம் 16 பட்டன்கள் தேவை. இதற்காக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் போதுமானது. இந்த நிலையில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிகள் நடந்துவருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாநில மொழி மட்டுமே இடம்பெறுவது வழக்கம். ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

வாக்காளர்களுக்கு பயிற்சி

இதுகுறித்து தேர்தல் தாசில்தார் கூறுகையில், ``கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லையில் அமைந்துள்ளதால் மலையாள மொழியில் கல்வி பயின்ற வாக்காளர்களுக்கு வசதியாக மலையாளத்திலும் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சட்டசபை தேர்தலில் கேரள எல்லைப் பகுதியில் உள்ள விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றிருக்கும். கடந்த தேர்தல்களைப் போன்றே இந்தத் தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன" என்றார்.