`ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க விடம் விசாரிக்க வேண்டும்' - டி.டி.வி தினகரன் புது குற்றச்சாட்டு! | ttv dinakaran election Campaign at kumbakonam

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (12/04/2019)

கடைசி தொடர்பு:07:00 (12/04/2019)

`ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க விடம் விசாரிக்க வேண்டும்' - டி.டி.வி தினகரன் புது குற்றச்சாட்டு!

ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் தி.மு.கவினரிடம்தான் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரை கொன்றுவிட்டதாகப் பெரிய பொய்யை கிளப்பிவிட்டதே தி.மு.கதான். எனவே, இது குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.

தினகரன்

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலர் டி.டி.வி தினகரன் அ.ம.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று கும்பகோணம் அருகே சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ``ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளும் புதிய கட்சிகள் போல்தான் உள்ளன. ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கி என்ன என்பது இத்தேர்தலுக்குப் பிறகு தெரிய வரும். மக்கள் மனதில் உண்மையாக எந்தக் கட்சி இருக்கிறதோ, அந்தக் கட்சிதான் வெற்றி பெறும். எனவே, இத்தேர்தலில் அ.ம.மு.க மாபெரும் வெற்றி பெறும்.

தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து தி.மு.க எங்களக்கு எதிரி. எனவே தி.மு.கவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம். அதேபோல, அ.தி.மு.க எங்களது துரோகி. மறுபடியும் தேர்தல் நடைபெறும் என்பதால்தான் இத்தேர்தலில் அ.தி.மு.கவை மக்கள் தோற்கடிக்கப் போகின்றனர். எனவே, மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

பிரச்சாரம்

ஜெயலலிதா மறைவு குறித்து முதலில் தி.மு.கவினரிடம்தான் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரை கொன்றுவிட்டதாகப் பெரிய பொய்யை கிளப்பிவிட்டதே தி.மு.கதான். அது பொய் என்பதால்தான் ஆர்.கே. நகர் தேர்தலில் தி.மு.க டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்தனர்.
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இப்போது, 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்துள்ளது. இதில், நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய மக்கள் விரோத ஆட்சியையும், மோடியின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் காரணமாக இருப்போம்" என்றார்.

பின்னர், கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயில் அருகே மயிலாடுதுறை தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து பிரசாரம் செய்த போது பேசியதாவது, ``பி.ஜே.பி பெரும்பான்மையான இந்துக்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறது. அவர்களை தூண்டி விட்டு சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது. இதை வாக்கு வங்கியாகவும் வைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்து விவசாயத்தை அழிக்கும் வேலையைச் செய்கின்றன.

தினகரன்

இந்த நிலைமை தொடர்ந்தால் இந்தியா விரைவில் சோமாலியா நாடைப் போன்று மாறும். பன்னாட்டு நிறுவனங்களை இறக்கி விட்டு காவிரி டெல்டா பகுதியைக் குறி வைக்கின்றனர். கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக் கட்டுவதற்கு பா.ஜ.க ஆதரவு அளித்துள்ளது. ஆனால், தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை கொண்டு வருகிறது. மக்களை பாதிக்க கூடிய திட்டங்களை நாங்கள் கொண்டு வர விட மாட்டோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க