100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு - வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்த பாம்பன் மனிதச் சங்கிலி! | A world record human chain conducted Pamban Bridge for emphasize 100% of the vote

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (12/04/2019)

கடைசி தொடர்பு:08:50 (12/04/2019)

100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு - வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்த பாம்பன் மனிதச் சங்கிலி!

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக பாம்பன் சாலை பாலத்தில் 3,000 பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி உலக சாதனை நிகழ்வாக அங்கீகாரம் செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மனித சங்கிலி

ஆசிய அளவில் நீளமான கடல் பாலங்களில் ஒன்றாக விளங்குவது பாம்பன். கடல் மீது அமைந்துள்ள அன்னை இந்திராகாந்தி சாலை பாலம் ஆகும். 2.34 கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் இரு புறங்களிலும் சுமார் 1,500 மீட்டர் இறங்கு தளமும் உள்ளது. இந்தச் சாலை பாலத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100 % வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுமார் 3,000 பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்வு நடத்தப்பட்டது.

பாம்பன்

மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வீரராகவ ராவ் தலைமையில் நடந்த இந்த மனிதச் சங்கிலியில் ராமநாதபுரம் தொகுதி பொது பார்வையாளர் நரேந்திரசிங் பர்மார், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப், காவல்துறை பார்வையாளர் ஶ்ரீநிவாசலு ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், மீனவர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் என சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.

இதில், வரும் தேர்தலில் வாக்காளர்கள் எவ்விதத் தூண்டுதலுக்கும் ஆட்படாமலும், அச்சம் இன்றியும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளைத் தாங்கிய படி பாலத்தின் மீதும் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்த படியும் மீனவர்கள் நின்றனர்.

பாம்பன்

கடல் மீது அமைந்துள்ள இந்தச் சாலைப் பாலத்தின் மீது நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது புக் ஆப் வேர்ல்ட் ரிக்கார்ட் என்ற அமைப்பின் மூலம் '‘Lengthiest Human Chain on Pamban Sea Bridge” என்ற சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியக் கடலோரக் காவல்படை கமாண்டர் வெங்கடேஷ், கடற்படை துணை கமாண்டர் சிமோத் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் குருநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.