``திடீரெனத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்; பாதுகாப்பில் குளறுபடி!" -ரத்தாகுமா ராகுலின் தேனி பயணம்? | Rahul Gandhi visit may cancel

வெளியிடப்பட்ட நேரம்: 08:07 (12/04/2019)

கடைசி தொடர்பு:08:07 (12/04/2019)

``திடீரெனத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்; பாதுகாப்பில் குளறுபடி!" -ரத்தாகுமா ராகுலின் தேனி பயணம்?

தேனி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து தேனியில் இன்று மதியம் பிரசாரம் செய்கிறார் ராகுல்காந்தி. அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏகப்பட்ட குளறுபடிகளால் ராகுல்காந்தியின் தேனிக்கான பயணம் ரத்தாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகுல்

அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போது லேசர் குண்டு மூலம் ராகுல்காந்தி குறிவைக்கப்பட்டார் என ஆதாரத்தோடு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்திருக்கிறது காங்கிரஸ். இந்நிலையில், இன்று, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார் ராகுல்காந்தி. இந்நிலையில், நேற்று காலை, தேனி அன்னஞ்சி விளக்கு அருகே பொதுக்கூட்ட மைதானத்தின் அருகே அமைக்கப்படிருந்த ஹெலிபேட்டில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரெனத் தரையிறங்கியது.

ஹெலிகாப்ட்டர்

பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியில் இருந்த பணியாளர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், ராகுல்காந்தி வரஇருப்பது தனியார் ஹெலிகாப்டர். தரையிரங்க வந்தது MI8 ரக ராணுவ ஹெலிகாப்டர்.! நாளை மறுநாள், தேனி மாவட்டம் கானாவிலக்கு அருகே பிரதமர் மோடி, அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய தேனி வருகிறார். அவர், ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக தேனி வர இருப்பதால், சோதனை ஓட்டமாக ஹெலிகாப்டரை தரை இறக்குவதற்கு கோவையில் சூலூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் தேனி வந்தது. கானாவிலக்கில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் தரையிரங்காமல், ராகுல் காந்திக்காக அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் அருகே தரையிரங்கியது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய கலெக்டர் அலுவலக வட்டார உயர் அதிகாரி ஒருவர், ``காலையில், இடம் மாற்றி ராணுவ ஹெலிகாப்டர் தரையிரங்கியது உண்மை. அவர்களுக்கு எங்கே தரையிரங்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் இருந்தும், தரையிரங்குவதற்கு முன்பாக, நீங்கள் தரையிரங்கும் இடம் தவறானது என அறிவுறுத்தப்பட்டும், ஹெலிபேடு அமைக்கப்படாத ஓரிடத்தில், சம்பந்தமே இல்லாமல் தரையிரக்கினார்கள். அதைத்தொடர்ந்து வேக வேகமாக ஹெலிகாப்டரை எடுத்துச்சென்றுவிட்டார்கள்." என்றார்.

தேனி

இந்நிலையில், நேற்று மாலை அடித்த காற்றில், ராகுல்காந்தி பேசுவதற்காக அமைக்கப்பட்ட மேடை சரிந்தது. 60க்கு 60 என்ற அளவுடன் அமைக்கப்பட்ட மேடை பெரியதாக இருப்பதாலே சரிந்தது. தற்போது 40 -க்கு 40 என்ற அளவில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே தேனிக்கு வந்து இங்குள்ள மாவட்ட காவல், வருவாய்துறை அதிகாரிகளிடம் பேசி, ஆலோசித்து திட்டமிட்டுச் சென்றிருக்கும் நிலையில், சம்பந்தமே இல்லாமல், ராணுவ ஹெலிகாப்டர் தரையிரங்குவதும், மேடை சரிந்து விழுவதுமாக இருப்பது ராகுல்காந்தி வருகை தொடர்பான பாதுகாப்பில் மிகப்பெரிய குறைபாடு இருப்பதையே காட்டுகிறது. காலை 10 மணிக்குள் மேடை தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர். பின்னர், பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் முடிக்கப்பட்டு அதன் பின்னரே ராகுல்காந்தி தேனி வருவார் என்கிறன தகவலறிந்த வட்டாரங்கள். ராகுல் தேனி வருவாரா? மாட்டாரா என்பது நாளை மதியம் தெரிந்துவிடும்.