`தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நிச்சயமாகத் தோற்கும்!’ -ஜி.கே.வாசன் காட்டம் | DMK-Congress Failure coalition - G.K.Vasan

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (12/04/2019)

கடைசி தொடர்பு:09:30 (12/04/2019)

`தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நிச்சயமாகத் தோற்கும்!’ -ஜி.கே.வாசன் காட்டம்

``சிறுபான்மை மக்களைப் பற்றி பேச, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு தகுதியில்லை. முரண்பாடற்ற அந்தக் கூட்டணி நிச்சயம் தோல்வியடையும்’’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் காட்டமாகக் கூறினார்.

ஜி.கே.வாசன்

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி, அ.தி.மு.க வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 11-ம் தேதி வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வாசன், ``தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி மிகப் பிரகாசமாக இருக்கிறது. நம்நாடு பாதுகாப்பாக இருக்க அனைத்துத் தரப்பு மக்களும் மீண்டும் பி.ஜே.பி ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் மத்திய அரசுடன் ஒத்த கருத்தோடு செயல்படுவதால் தமிழகத்தின் வளர்ச்சி தடையில்லாமல் இருக்கும். 

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சிபெறும். பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் வருமானம் இரட்டிக்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. விவசாயக் கடனுக்கு வட்டியில்லை. கிராமப்புற வளர்ச்சிக்கு மட்டுமே ரூ.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளாகப் பார்க்கப்படுகின்றன. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் முரண்பாடே அவர்களின் தோல்விக்கு காரணமாக அமையும்’’ என்றுகூறினார்.

இதைத்தொடர்ந்து, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் களமிறங்கியிருக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, ஆம்பூரில் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ``தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு சிறுபான்மையினரைப் பற்றி பேசத் தகுதி இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. சிறுபான்மை மக்களை தி.மு.க கூட்டணி ஏமாற்றுகிறது. வருங்காலம் தமிழகத்துக்கு வசந்த காலம். ஏ.சி.சண்முகம் பணம் படைத்தவர் மட்டுமல்ல நல்ல குணம் படைத்தவரும் கூட. அவரை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார்.