`இந்தத் தேர்தலோடு எல்லாம் முடிவுறப்போகுது'- திருப்பூரில் தகித்த வைகோ | Vaiko election campaign at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (12/04/2019)

கடைசி தொடர்பு:10:00 (12/04/2019)

`இந்தத் தேர்தலோடு எல்லாம் முடிவுறப்போகுது'- திருப்பூரில் தகித்த வைகோ

 

வைகோ

 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், ``இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் திருப்பூரில் தொழில் செய்து முன்னேற முடியும் என்ற நிலையை, மோடியின் பா.ஜ.க அரசு தகர்த்துவிட்டது.

மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் திருப்பூரின் தொழில்துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டும், பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டும் இருக்கின்றன. ஆனால், அதேசமயம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமார் 2 லட்சத்து 42,000 கோடி கடனை மொத்தமாக தள்ளுபடி செய்து, அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் கோடி வரை வரிச் சலுகையையும் அள்ளி வழங்கியிருக்கிறது இந்த மோடி அரசு.

இன்றைக்கு ஹைட்ரோ கார்பன், மேக்கே தாட்டூ அணை, முல்லைப்பெரியாறு அணை, உயர்மின் கோபுர விவகாரம் என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு காலால் சொல்வதை, தலையால் செய்யத் துடிக்கும் எடப்பாடியின் அரசு, தன் சுயநலத்துக்காக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்திருக்கிறது.

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 41 இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை முன்வைத்து பா.ஜ.க-வுக்கு வாக்கு கேட்கிறார் மோடி. இது பேராபத்து மட்டுமல்ல. பெரும் ஜனநாயகச் சீரழிவு. வரும் நாடாளுமன்றத் தேர்தல், ஜனநாயகம் காப்பாற்றப்படுமா, கொலைகார பாசிச கும்பல் மீண்டும் வெற்றி பெறுமா  என்பதை தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக இருக்கப்போகிறது. அதில் மத்தியில் மோடி ஆட்சியும், இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் எடப்பாடியின் ஆட்சியும் முடிவுறப்போகிறது என்று பேசினார்.