அறந்தாங்கியில் புத்துயிர் பெற்றது பெரியார் சிலை! | Periyar statue revived in Aranthangi

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (12/04/2019)

கடைசி தொடர்பு:11:15 (12/04/2019)

அறந்தாங்கியில் புத்துயிர் பெற்றது பெரியார் சிலை!

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் மர்ம நபர்களால் தலை உடைக்கப்பட்ட பெரியார் சிலை, சீரமைக்கப்பட்டு தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. சீரமைக்கப்பட்ட சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

பெரியார் சிலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலையை கடந்த 7-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் உடைத்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரியார் சிலையை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும், பெரியார் சிலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று போராட்டங்கள் வலுத்தது. குறிப்பாக, தி.க, தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் காத்திருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அன்று மாலையே கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர்.

பெரியார் சிலை அன்று இன்று

சிலையில் உடைந்த பாகங்களுக்குப் பதிலாக புதிய பாகங்கள் செய்து அதை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, பெரியார் சிலை சீரமைக்கப்பட்டு, புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. சீரமைக்கப்பட்ட பெரியார் சிலைக்கு  தி.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

இதனிடையே பெரியார் சிலையை உடைத்த சம்பவத்தில் அறந்தாங்கி போலீஸார் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.