``ஒருபோதும் தமிழிசையால் நிர்மலா சீதாராமனாக முடியாது!" - கோவையில் கரு.பழனியப்பன் பிரசாரம் | Karu Palaniyappan slams BJP leader

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (12/04/2019)

கடைசி தொடர்பு:12:05 (12/04/2019)

``ஒருபோதும் தமிழிசையால் நிர்மலா சீதாராமனாக முடியாது!" - கோவையில் கரு.பழனியப்பன் பிரசாரம்

கரு.பழனியப்பன்

கோவை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிடும் சி.பி.எம்.வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதிரித்து சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. கார்த்தி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் கோவையில் பிரசாரம் செய்தனர்.

அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், ``செல்லும் இடத்திலெல்லாம் காவல்காரன் வந்திருக்கிறேன் என்கிறார் மோடி. ஆனால், நேற்று உச்ச நீதிமன்றம் ரஃபேல் வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கியது என்று அனைவருக்கும் தெரியும். இவர் எப்படி நாட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி 500,1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்து அதை புரட்சியாகக் காட்டிக்கொண்ட மோடி, தேர்தல் பிரசாரத்தில் அது குறித்துப் பேசாமல் இருப்பது ஏன். மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறுகிறார். அதன் உள்நோக்கம் என்ன. 5 ஆண்டு ஆட்சியில் டீசல், கேஸ் விலை ஏறியதுதான் மிச்சம்" என்றார்.

கோவையில் கரு பழனியப்பன் பிரசாரம்

அடுத்ததாகப் பேசிய கரு.பழனியப்பன்,  ``மோடி அரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாம் திரும்பத்திரும்ப பேசியாக வேண்டும். 18-ம் தேதி வரை அனைவரும் பேச வேண்டும். இங்கு தாமரை ஒருபோதும் மலராது என்பதை நிரூபிக்கக் கூடிய நாள் ஏப்ரல் 18. பொய் மூலமாகவே ஆட்சியைப் பிடித்தோம். நிலைத்தோம், மீண்டும் வருவோம் என்று அவர்கள் நம்பிக்கொண்டுள்ளார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பதுபோல பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு பொய்யால்தான் வீழ்ச்சி.

எங்களுக்கு வாக்களித்தால் சிறு குறு தொழில் ஜி.எஸ்.டி. 5 சதவிகிதமாக குறைக்கப்படும் என்கிறார் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவர்கள்தானே ஆட்சியில் இருக்கிறார்கள். இவர்கள்தானே ஜி.எஸ்.டி. கொண்டு வந்தார்கள். மக்கள் இவர்களை ஐந்து ஆண்டுகள் பார்த்துவிட்டார்கள். இனிமேலும் ஏமாறமாட்டார்கள். சிறுபான்மையினருக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் சுயமாக சிந்தித்து செயல்பட முடியாது என யோகி ஆதித்யநாத் சொல்கிறார். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் சங்கராச்சாரியர் முன் சுப்பிரமணிசாமி உட்கார முடியும். பொன்.ராதாகிருஷ்ணனால் உட்கார முடியுமா?

தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடுகிறார். ஆனால், போட்டியிடாமலேயே மக்களை சந்திக்காமலேயே நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சராகிறார். ஒருபோதும் தமிழிசையால் நிர்மலா சீதாராமனாக முடியாது. சி.பி.ராதாகிருஷ்ணனிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்துக்கும், சிறுமி கொலைக்கும் முதல்வர் ஒரு கண்டனம் கூறவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் செல்ல வேண்டிய நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடி நாடு நாடாகச் சென்றார். இப்போது திடீரென காவல்காரன் என்கிறார். மோடி மனைவி அவர் இல்லாமலேயே நிம்மதியாக இருக்கிறார். அதுபோல் மோடி இல்லாமல் நாமும் நிம்மதியாக இருக்கலாம். கோ பேக் மோடி என்று சொல்வோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க