`ஆண்டிபட்டியில் மறந்துவிட்டார்; குளத்தூரில் முந்திக்கொண்டார்!'- சுதாரித்துக்கொண்ட சரத்குமார் | Stalin does not know how to speak civilised allegation by sarathkumar

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (12/04/2019)

கடைசி தொடர்பு:12:30 (12/04/2019)

`ஆண்டிபட்டியில் மறந்துவிட்டார்; குளத்தூரில் முந்திக்கொண்டார்!'- சுதாரித்துக்கொண்ட சரத்குமார்

``ஸ்டாலினுக்கு நாகரிகமாகவோ, கொள்கை ரீதியாகவோ, கட்சியைப் பற்றியோ பேசத் தெரியாது. என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசி வருகிறார். அவரது இத்தகைய நாகரிகமற்றப் பேச்சுக்களாலேயே மக்களிடம் தன் செல்வாக்கை இழந்து வருகிறார்” என ச.ம.க. தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் பிரசாரம்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இந்தக் கூட்டணி ஒரு மெகா கூட்டணி. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாட்டிலும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். ``அமேதிக்கு என்ன செய்தீர்கள்” என மக்கள் கேட்பார்கள் என்பதால், அதற்கு பயந்து வயநாட்டிலும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வயநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறார் ராகுல். அங்கு அவர்கள் விரோதி. ஆனால், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். பிரதமர் மோடி ஆட்சி மீது காங்கிரஸார், ஊழல் குற்றச்சாட்டினைக் கூறுகிறார்களே. இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில்தான் தாரை வார்க்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக 3,600 கோடி ரூபாய்க்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது.

தமிழிசைக்கு ஆதவராக பிரசாரம் செய்யும் சரத்குமார்

2008-ல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1,76,000 கோடி ரூபாய்க்கு நடந்த ஊழலில், அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 10 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி ஒதுக்கீட்டில் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸும் தி.மு.க.,வும் ஊழல் மிகுந்த கட்சி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்தவர்தான் பிரதமர் மோடி.

ஒரு பிரதமரைப் பார்த்து காவலாளி அல்ல, களவாணி என்றெல்லாம் சொல்கிறார் ஸ்டாலின். அவருக்கு நாகரிகமாகவோ, கொள்கை ரீதியாகவோ, கட்சியைப் பற்றியோ பேசத் தெரியாது. என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசி வருகிறார். ஸ்டாலினின் இத்தகைய நாகரிகமற்ற பேச்சுகளாலேயே மக்களிடம் தன் செல்வாக்கை இழந்து வருகிறார். இதே தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசையை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் கனிமொழியை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” என்றார்.   

சரத்குமார்

கடந்த 10-ம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், தேனி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளர் லோகிராஜன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் சரத்குமார். அதில், ரவீந்திரநாத்குமாரின் பெயரையே சொல்லி ஆதரவு திரட்டிய அவர், ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜன் பெயரைச் சொல்ல மறந்துவிட்டார். இதுகுறித்து தொண்டர்கள் கோபமாக குரல் எழுப்பியும் பிரசார பி.சி-யில் சரத்குமார் கண்டுகொள்ளவில்லை. பிரசாரம் முடிந்து கிளம்பும்போது அருகில் இருந்தவர்கள் விவரத்தைச் சொன்ன பிறகே மீண்டும் மைக்கில் ஆண்டிப்பட்டி வேட்பாளர் பெயரைச் சொன்னார். குளத்தூரில் நடைபெற்ற பிரசாரத்தில் முதலில் இரண்டு வேட்பாளர்களின் பெயர் சின்னத்தைச் சொல்லி ஆதரவு திரட்டி பேசிய பிறகே பேச்சைத் தொடங்கினார் சரத்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க