`இடைத்தேர்தலுக்குப் பின் இந்த ஆட்சியை மோடி டாடியாலும் காப்பாற்ற முடியாது!'‍- டி.டி.வி போடும் புதுக் கணக்கு | 'Modi can not save this rule after the by-election'

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (12/04/2019)

கடைசி தொடர்பு:12:45 (12/04/2019)

`இடைத்தேர்தலுக்குப் பின் இந்த ஆட்சியை மோடி டாடியாலும் காப்பாற்ற முடியாது!'‍- டி.டி.வி போடும் புதுக் கணக்கு

``சாதி, மதம், இனத்தின் பெயரைச்சொல்லி யார் ஓட்டு கேட்டாலும் வந்தாலும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்'' என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆவேசமாகப் பேசினார்.

ஜெயங்கொண்டத்தில் பிரசாரம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் இளவரசனை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய தினகரன், ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் சாதியையும் மதத்தையும் தனது பிரசாரத்தில் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார். சாதி, மதம் பற்றி யார் பேசிக்கொண்டு ஓட்டு கேட்டாலும் ஓட்டளிக்க வேண்டாம். மோடியையும் அவருக்கு எடுபிடியாக உள்ள எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் இது. நாட்டில் ஜி.எஸ்.டி-யால் வேலைவாய்ப்பை இழந்து 6 லட்சம் பேர் உள்ளனர். பண மதிப்பிழப்புக் கொள்கையால் கறுப்புப் பணம் மீட்கப்பட்டதா. விவசாயிகள், நெசவாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிடிவி பிரசாரம்

தமிழ்நாட்டில் சாதி, மதம் இல்லாத ஒரு இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்தான். தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாக உள்ளதால் ஜெயலலிதாவின் ஆட்சியை அ.ம.மு.க-வால் மட்டுமே கொடுக்க முடியும். 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நம்முடன் உள்ளனர். மக்களை ஏமாற்றி வரும் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்.  நடைபெறவுள்ள மினி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில்கூட ஆளுங்கட்சி வெற்றி பெறாது. இதனால், தற்போது உள்ள ஆட்சியை மோடியாலேயும் அவர் டாடியும் காப்பாற்ற முடியாது.

தினகரன்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜெயங்கொண்டம் பகுதியில் முந்திரி தொழிற்சாலை, அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். வறட்சியால் முந்திரி பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தரப்படும். பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத சுண்ணாம்பு சுரங்கங்களை மூடி பசுமை காடுகள் வளர்க்கப்படும். மேலும், மக்கள் விரோத அரசாக உள்ள நரேந்திர மோடியையும், அடிமை அரசாக உள்ள எடப்பாடியை ஆட்சியில் இருந்து அகற்ற பரிசுப் பெட்டகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும்'' என்று முடித்துக்கொண்டார்.