மனநலக் காப்பத்தில் குணமடைந்தவர்கள், முதல்முறையாக ஓட்டளிக்க ஏற்பாடு! | For the first time, the patients from Kilpauk hospital got their voting rights

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (12/04/2019)

கடைசி தொடர்பு:15:24 (12/04/2019)

மனநலக் காப்பத்தில் குணமடைந்தவர்கள், முதல்முறையாக ஓட்டளிக்க ஏற்பாடு!

"தேர்தல் அறிக்கையைப் படித்துவிட்டுதான் யாருக்கு ஓட்டு போடுவதென்கிற முடிவுக்கு வருவோம் என இவர்கள் சொல்லி இருக்கிறார்கள்."

மனநலக் காப்பத்தில் குணமடைந்தவர்கள், முதல்முறையாக ஓட்டளிக்க ஏற்பாடு!

றத்தாழ இருநூறு ஆண்டுக்காலமாக இயங்கி வருகிறது, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை. அங்கு, பிணியாளர்களாகச் சேர்ந்தவர்கள், குணமான பிறகும் அவர்களை குடும்பத்துடன் மீண்டும் இணைத்துக்கொள்ள உறவினர்கள் வராமல் மனநலக் காப்பகத்திலேயே பலரும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் காப்பகத்தில் வழங்கப்படுகிறதென்றாலும், அவர்களுக்கான ஜனநாயக உரிமை நெடுங்காலமாக மறுக்கப்பட்டு வந்தது. இங்கு ஜனநாயக உரிமை எனக் குறிப்பிடுவது ஓட்டுரிமையைத்தான். அவர்கள் ஒரு சராசரி மனிதருக்கான மனநிலைக்கு வந்துவிட்டாலும் கீழ்ப்பாக்கம் காப்பகத்தில் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக, அவர்கள் மீது இந்தச் சமூகமும், மாநில அரசும் பாராமுகமாக இருந்து வருகிறது.

மனநலம்

இத்தகைய சூழலில்தான் முதன்முறையாக கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ளவர்களுக்கும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுரிமை வழங்க இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ அறிவித்திருக்கிறார். அவர் குறிப்பிடுகையில், ``சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக முதல்முறையாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். வாக்களிக்கத் தகுதியுடைய 192 பேரை, அந்தக் காப்பகத்தின் மருத்துவர்கள் தேர்வு செய்திருக்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை மட்டுமன்றி 13 ஆவணங்களைக் காண்பித்தும் அவர்கள் வாக்களிக்கலாம்" என்றார். 

இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை இயக்குநர் பூர்ண சந்திரிகாவிடம் பேசினோம்.

``இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது எப்படி இது சாத்தியமாயிற்று?"

``மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடுகிற அமைப்பினரின் தொடர் போராட்டத்தால்தான் இது சாத்தியமானது. அவர்கள் இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்தார்கள். அரசு எங்களிடம் அந்தக் கோரிக்கையை பரிசீலனைக்கு அனுப்பியது. நாங்கள் நிறைய யோசித்த பின்னர், அதை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டோம். பரிசீலனைக்குச் சிலநாள்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் யார் ஆட்சிக்கு வர வேண்டுமென சுயமாகச் சிந்தித்து வாக்களிக்கக்கூடிய திறன் எங்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அந்தத் திறனை முறையாகப் பரிசோதிக்க எண்ணினோம். ஆகவே, மருத்துவர்களை வைத்து முகாம் அமைத்து நேர்காணல் செய்தோம். அவ்வாறு நேர்காணல் செய்யப்பட்டதில்தான் 192 பேர் தேர்வாகியிருக்கிறார்கள்".

``நேர்காணலில் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன?"

``மிக எளிமையான கேள்விகள்தான் கேட்டோம். `இந்தியா முழுவதும் நடப்பது, சட்டமன்றத் தேர்தலா, நாடாளுமன்றத் தேர்தலா?', 'நீங்கள் எந்தத் தொகுதியில் இருந்தீர்கள்?', 'இந்தியாவில் தற்போது பிரதமர் யார், இதற்கு முன்பு யார் இந்தியப் பிரதமராக இருந்தார்?' என்பன போன்ற கேள்விகளைத்தான் கேட்டோம். அதில் 192 பேர் தெளிவாகப் பதில் சொன்னார்கள்".

கீழ்ப்பாக்கம் மருத்துவ இயக்குனர்

``ஓட்டு போட அவர்கள் தயாராகி விட்டார்களா?"

``எங்கள் மருத்துவமனை இருப்பது மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்டது என்பதால், அங்கே போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் படிக்க வேண்டும். அதைப் படித்துவிட்டுதான் யாருக்குப் போடுவதென்கிற முடிவுக்கு வருவோம் எனச் சொல்லி இருக்கிறார்கள். வெளியுலகில் இருப்பவர்கள்கூட இவ்வளவு தெளிவாக அரசியல் விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்களுக்கு அரசியல் அறிவு இருந்தாலும் அதிகம் பேர் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு செய்ய இருக்கிறார்கள் என்பதால், மின்னணு இயந்திரங்களில் வாக்குகளை எப்படிப் பதிவு செய்ய வேண்டுமென்கிற பயிற்சி கொடுக்க இருக்கிறோம். அதன் அடிப்படையில் வாக்களிக்கத் தயாராகி விடுவார்கள்".

``இவர்களெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள்தானே வாக்காளர் அட்டை எதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்டது?"

``இங்குள்ள எல்லோருக்கும் மருத்துவமனை முகவரியை `கேர் ஆஃப் அட்ரஸ்' எனக் கொடுத்தோம். அதை வைத்துத் தேர்தல் ஆணையம் அனைவருக்கும் அட்டை வழங்கியிருக்கிறது. அதை வைத்துத்தான் இவர்கள் வாக்களிக்கப்போகிறார்கள். இவர்களுக்கு இப்படியொரு உரிமை கிடைக்கப்பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மனநலக் காப்பகத்தில் உள்ளவர்கள் சிந்தித்து வாக்களிக்க இருப்பது போலவே, வெளியே இருக்கும் பொதுமக்களும் சிந்தித்து தங்களின் வாக்குரிமையை தவறாமல் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்".   


டிரெண்டிங் @ விகடன்